என்றென்றும்வைரம்
#wtwகதைஎழுது
#August2025
#கதை #அனுபவம்
#Diamondsareforever
#என்றென்றும்வைரம்
என்றும் வைரம்
நேரமில்லாததால் தாமதமான பதிவு🙏
வைரம் என்றதுமே நம் நினைவில் வருவது அதன் விலைமதிப்பும், பளபளப்பும், அதன் அழகுமே. வைர நகைகளை விரும்பாதவர் யார்! அதிலும் பெண்கள்!
குழந்தைகளை என் கண்ணே, மணியே, முத்தே, வைரமே என்று கொஞ்சுவோம். வலுவான உடலுள்ளவர்களைப் பார்த்து..சரியான வைரம் பாய்ந்த கட்டை என்போம்!
இனி நம் தலைப்புக்கு வருவோம். வைரம் என்றதும் அதன் அழகோடு மதிப்பும் மிக அதிகம் என நாம் அறிவோம். வைரம் என்பது கரி என்றால் நம்மால் நம்ப முடிவதில்லை. உறுதியான, சுத்தமான, ஒளி ஊடுருவக்கூடிய கார்பன்தான் வைரமாகும். பல ஆண்டுகளாக பூமிக்கடியில் இருந்து உயிரியல், ரசாயன மாற்றங்களால் கெட்டியாகிய கரி என்ற கார்பன் தான் வைரம் எனப்படும்.
வைரத்தின் ஆங்கிலப் பதமான ‘டைமண்ட்’ கிரேக்க வார்த்தையான ‘அடாமஸ்’ (வெல்ல முடியாதது)என்ற சொல்லிலிருந்து தோன்றியது. வைரம் என்பது அன்பு, அழகு, காதல், தெய்வீகம் இவற்றின் குறியீடாகும்.
1868-ல் தென்ஆப்பிரிக்காவிலுள்ள ஆரஞ்சு நதிக்கரையில் ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் வைரம் ஒன்றை கண்டெடுத்த அந்த இடம்தான் இன்று புகழ்பெற்ற ‘கிம்பர்லி’ சுரங்கமாக விளங்குகிறது. ‘கிம்பர்லி’ என்ற ஆங்கிலேயரின் பெயராலேயே இப்பெயர் பெற்றது.
வைரம் நிறமற்றது. ஒரு காரட் என்பது 200 மி.லி. கிராம். இன்றைக்கு வைர மார்க்கெட்டில் முதலிடம் வகிப்பது தென் ஆப்பிரிக்கா. 54 பட்டைகளை சரியான கோணத்தில் தீட்டப்பட்ட வைரமே அதிக மதிப்பு வாய்ந்தது.
வைரங்களை பாலிஷ் செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
நம் நாட்டின் 186 காரட் ‘கோகினூர்’ வைரம் உலகப் பிரசித்திப் பெற்றது. கோகினூர் என்றால் ‘பிரகாசிக்கும் மலை’ என்று பொருள்.
1849 ஆம் ஆண்டு பஞ்சாப் கைப்பற்றப்பட்டபோது, கோஹினூர் வைரம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு, விக்டோரியா மகாராணியின் கிரீடத்தில் வைக்கப்பட்டது. நான் 2014ல் லண்டன் சென்றபோது லண்டன் பொருட்காட்சியில் இருந்த கிரீடம் தற்சமயம், லண்டன் ஜுவல் ஹவுஸ் கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது. நான் சென்ற ஆண்டு லண்டன் சென்றபோது அதைப் பார்க்க அனுமதிப்பதில்லை என்றான் என் பிள்ளை.
அரை நூற்றாண்டுக்கு முன்பு வைரநகை என்பது அணியவே பயந்த காலம். தற்போது பலவித மாறுபாடுகளுடன் குறைந்த விலையிலும் வைர நகைகள் கிடைக்கிறது. வைரத்துடனான என் அனுபவம் இனி!!
1976ம் ஆண்டு நடந்த என் திருமணத்
திற்கு வைரத்தோடு, மூக்குத்தி போடும்படி என் மாமியார் கேட்டார். எங்கள் குடும்பம் சாதாரண நடுத்தர குடும்பம். எனக்குப் பின் என் மூன்று தம்பிகள் படித்துக் கொண்டி
ருந்தனர். என் அப்பா வைரமூக்குத்தி மட்டுமே போடமுடியும் என்று சொல்லி விட்டார்.
நாங்கள் அச்சமயம் முசிறியில் இருந்தோம். திருச்சியில் வைரத்திற்கு புகழ் பெற்ற கோபால்தாஸ் கடையில் மூக்குத்தி வாங்கினோம். மிக அழகாக ஜொலித்தது மூக்குத்தி! முத்து மூக்குத்தி..மேலே ஒரு பெரியகல்லும், கீழே நான்கு சின்ன கற்கள் இணைத்த வளையமுமாக இருந்தது. தனியாக ஒரு கல் மூக்குத்தியாகவும் போடலாம்.
எனக்கு மூக்கு குத்திக் கொள்ளவே இஷ்டமின்றி குத்திக் கொண்டேன்!
திருமணத்திற்கு பின் அவ்வப்போது என் மாமியார்,'ஒரே பெண்தானே நீ உன் அப்பா வைரத்தோடு போடவில்லையே' என சொல்லிக் காட்டுவார். எனக்கு அதில் அவ்வளவு ஆர்வமில்லை. தோடு வாங்கும் அளவுக்கு வசதியுமில்லை.
என் கணவர் வங்கி அதிகாரி. இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மாறுதல். அடுத்தடுத்து குழந்தைகள். நகைகள் எப்பவும் லாக்கரில்தான் இருக்கும்!என் கணவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபோதுதான் எனக்கு ஒரு வைரத்தோடு வாங்கிக் கொள்ளும் ஆசை வந்தது. GRTயில் சின்ன அளவில் வைரத்தோடு வாங்கிக் கொண்டேன். என் அம்மாவின் புஷ்பராகத் தோடு எனக்கு கொடுத்தார்.அதை புது வைரம் என்பர். வைரம் போல் இன்றுவரை பளபளவென இருக்கிறது.
Second Channel காது குத்திக் கொண்டபோது , தனிஷ்க்கில் சிறிதாக தொங்குவது போல் வைரத்தோடு வாங்கினேன். என் கணவரின் பீமரதசாந்தியின் போது என் குழந்தைகள் சேர்ந்து எனக்கு புதிய மாடலில் வைரத்தோடு வாங்கித் தந்தார்கள். நானும் என் பேத்திகளுக்கு வைரத் தோடுகளை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். வைரம் நம் வாழ்க்கையில் நம்பிக்கையை அதிகரிப்பதுடன் மகிழ்ச்சியையும், உறுதியான அன்பையும், நம் அழகையும் எடுத்துக் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.
ராதா பாலு
கருத்துகள்
கருத்துரையிடுக