புறாக்கூண்டு வீடு

 

Wtwstories 2021F

Februarystory2







Wtwகதைஎழுது

புறாக்கூண்டு வீடு

அன்று மதுரத்தின் மனம் பழைய நினைவுகளிலேயே நின்றது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்..

திருமணமாகி சுந்தரத்துடன் குடியேறியது செம்மேடு என்ற அந்த சின்ன கிராமத்தில். மாமியார், மாமனார், இரண்டு  நாத்தனார்கள் என்று கூட்டுக் குடும்பம். காலை சூரிய உதயம் பார்த்து ஸ்லோகம் சொல்லி நமஸ்கரித்து வேலை ஆரம்பித்தால்  தூங்கவும் நேரம் இருக்காது.

சுந்தரத்துக்கு சென்னையில்  வேலை. இவளால் அவன் சம்பளத்தில் தனிக் குடித்தனம் செய்ய முடியாதென்பதால் இவள் வாசம் புக்ககத்து மனிதர்களுடன்.

காலை சமையல் சாப்பாடு
முடிந்ததும் அப்பளம் இடுவது ஊறுகாய் போடுவது என்று சிறிது கண் அயரவும் நேரமிருக்காது. கொல்லையில் மா ,எலுமிச்சை,நாரத்தை மரங்கள் இருந்ததால் ஜாடி ஜாடியாக ஊறுகாய்கள் ஊறிக் கொண்டிருக்கும்!

சுந்தரம் வந்து விட்டால் வீட்டில் ஸ்பெஷல் சாப்பாடு! திரும்ப அவன் ஊருக்குப் போவதை அவளால் தாங்க முடியாது. ஆனால் அவன் சம்பளத்தில்
தான் நாத்தனார்கள் திருமணம் முடிக்க வேண்டும். மாமனா
ருக்கு போஸ்ட் ஆஃபீஸ் வேலை. அதிக சம்பளம் கிடையாது. அவன் திரும்பப் போனதும் மதுரம் அசோக வனத்து சீதை மாதிரி சுந்தரம்  எப்பொழுது வந்து அழைத்துச் செல்வான் என்று விடியலுக்காகக் காத்துக் கொண்டிருப்பாள்!

இரண்டு பிள்ளைகள் பிறந்தபோதும் பிறந்த வீடு சென்றவளை இரண்டே மாதத்தில் கொண்டு விடும்படி சொல்லி விடுவாள் அவள் மாமியார்.

அவள் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சி இத்தனை வருடமாகியும் அவள் மனதை விட்டு அகலவில்லை. அவளுடைய  இரண்டாவது நாத்தனார் பாரதிக்கு 16 வயது. இவளை ரொம்பப் பிடிக்கும். மதுமன்னி என்று கூப்பிட்டு இவளையே சுற்றி வருவாள்.

கிராமங்களில் மாலை வேளைகளில் வயதுப் பெண்கள் தனியாக கொல்லைப் பக்கம் போனால் காற்று கருப்பு அடித்துவிடும் என்பார்கள். ஒருநாள் அந்தி மயங்கிய நேரம் மாலை ஏழுமணி இருக்கும்.
கொல்லைப் பக்கம் கிணற்றில்
தண்ணீர் இழுக்கப் போனாள்
பாரதி. திடீரென்று வீல் என்று ஒரு அலறல் சத்தம்.
"அம்மா..இங்க வாயேன். இந்தக் கண்ணை வந்து பார். என்னையே பாக்கறா. என்னால் நகர முடியவில்லை"என்ற சத்தம் கேட்டு கொல்லைப் பக்கம் முதலில் ஓடியவள் மதுரம்தான்.

"பாரதி என்னாச்சு. இங்க பாரு. யாரு வந்தா?" 

"மன்னி..அவளை போகச் சொல்லுங்கோ" என்று சொல்லியபடி மயங்கி விட்டாள். அவள் கத்தல் கேட்டு எல்லோரும் அங்கு கூடிவிட்டனர். அந்த நாட்களில் விளக்குகள் அதிகமிருக்
காததால் வெளிச்சம் குறைவாகதான் இருக்கும்.

மதுரத்தின் மாமனார் ஒரு டார்ச் விளக்குடன் வந்தவர் கொல்லை முழுவதும் சுற்றி வந்தும் எதுவுமில்லை. மயங்கியவளை உள்ளே படுக்க வைத்து ஆசுவாசப் படுத்தியதில் அசந்து தூங்கிவிட்டாள். திடீர் திடீரென்று தூக்கத்தில் எழுந்து கத்தினாள்.

மறுநாள் மந்திரிப்பவரை அழைத்து வந்து மூன்று நாட்கள் மந்திரித்தும் எந்தப் பலனுமில்லை. அடிக்கடி எழுந்து அலறுவதும் அடங்குவதுமாக இருந்தாள். சாப்பிட எது கொடுத்தாலும் வெளியில் வந்துவிடும். டாக்டரிடம் காட்டி மருந்து கொடுத்தும் எதுவும் உள்ளே போகவில்லை.

அக்கம்பக்கம் இருப்பவர்கள் பிரும்மராட்சசன் அடித்து விட்டதாக சொன்னார்கள். அதற்கான மந்திர தந்திரங்கள் செய்தும் நாளுக்கு நாள் உடம்பு மோசமானது. அதைத் தான் காத்து கருப்பு என்பார்களாம். அதனால்தான் அந்த காலத்தில் பெண்களை சந்தியா
காலத்தில் கொல்லைப்
பக்கம் போக வேண்டாம் என்பார்களாம்.

நாளுக்குநாள் உடம்பு மோசமாகி இரண்டு மாதத்தில் இறந்து விட்டாள்.  அந்த இழப்பு மதுரத்தை ரொம்பவே பாதித்தது. அதன்பின் அங்கு இருக்கவே பயந்தவள் சுந்தரத்திடம் சென்னையில் வீடு பார்க்கச் சொல்லி அங்கேயே எல்லோரும் குடி வந்து விட்டார்கள்.

அவள் நாத்தனாருக்கு  திருமணமாகிவிட, இவள் பிள்ளைகளும் நன்கு படித்து தற்சமயம் லண்டனிலும் அமெரிக்காவிலும் வேலையில் இருக்கிறார்கள்.

சுந்தரம் தற்சமயம் மும்பையில் வேலையில் இருக்கிறான். ஆஃபீஸ் குவார்ட்டர்ஸ் ஆறு மாடிக் கட்டிடம். புறாக்கூண்டு போல் குட்டி வீடுகள்.அடுத்த வீட்டில் இருப்பவர் யாரென்று தெரியாது. பாவம்..வீடிழந்த புறாக்கள் பரிதாபமாக சன்னலுக்கு வெளியே! இவை நம்மை எப்படி சபிக்குமோ என்று எண்ணினாள்!

அவற்றை வெளியில் வேடிக்கை பார்த்தவளின் மனதில் பழைய நினைவுகள் வரிசை கட்டி வந்தன.

"ஆண்ட்டி..தர்வாஜா கொலோ. மீ ஜோதி ஆகயி" என்ற வேலைக்காரியின் குரல் கேட்டு நினைவுகளிலிருந்து மீண்டாள். மதுரம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சார்தாம் யாத்ரா..14

சார்தாம் யாத்ரா..9

சார்தாம் யாத்ரா..13