பிறந்தவீடு (சிறுகதை)(27.2.'21)

பிறந்தவீடு 

கார் அந்த கிராமத்தில் நுழைந்ததுமே கிரீஷும் கீர்த்தனாவும் 'உன்னோட வீடு எங்கேம்மா இருக்கு' என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். கணபதி அக்ரஹாரம் அருகில் அழகான சிறு கிராமம்.  'இதோ இன்னும் கொஞ்ச தூரம்தான். போயிடலாம்' என்றான் சுரேஷ். சித்ராவின் மனம் அன்று அவளும், அவளுடன் பிறந்தவர்களும், சித்திகளின் குழந்தைகளுமாக ஆடிப் பாடி கூடி விளையாடிய நினைவுகளை அசை போட்டது.

இது சித்ராவின் தாய்வழித் தாத்தா வீடு. அஞ்சல் நிலையத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய அவருக்கு மூன்று பெண்கள். ஒரே பிள்ளை. கோடை விடுமுறை ஆரம்பித்ததுமே மூன்று பெண்களின் குழந்தைகளும் இங்கு வந்து விடுவார்கள். தாத்தா வீட்டில் வண்டி இருந்ததால் அதில் ஏறி பக்கத்து ஊர்களைச் சுற்றி வருவார்கள். ஒரு மாதம் போவதே தெரியாது. சுரேஷ் சித்ராவின் மாமா பிள்ளை. சுரேஷின் தந்தை வெளியூரில் வங்கிப்பணியில் இருந்ததால் எல்லோரும் இணைந்து விளையாடிக் களிப்பது கோடை விடுமுறையில் மட்டுமே! 

சுரேஷுக்கு சித்ரா என்று சிறு வயதிலேயே பெரியவர்கள் முடிவு செய்து இப்போது இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்க வாசம். ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் ஏதாவது விசேஷங்களுடன் எல்லாரையும் சென்று பார்க்க வேண்டியிருப்பதால் சொந்த ஊருக்கு வர நேரமே கிடைக்காது.

கிராமத்தில் நுழையும்போதே அங்கிருந்த டீக்கடைக்
காரர்..அட சுரேஷ்.எப்படி இருக்க? அமெரிக்காகாரனாகி ஒரேயடியா எங்களை மறந்துட்டயே....எனக் கேட்க சுரேஷ்..ஹேய் ராஜு நீ இங்கயே டீக்கடை வச்சு செட்டிலாய்ட்டயா?..என்றான்.
..ஆமாம்பா. நான் படிச்சபடிப்புக்கு வேற என்ன வேலைப்பா கிடைக்கும்? உன் பசங்களா?..என்றபடி குழந்தைகளை அணைத்துக் கொண்டான். அவர்களுக்கு பிஸ்கட்டையும் சுரேஷ் சித்ராவுக்கு ஸ்பெஷல் டீயும் கொடுத்து பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டார்கள்.

சற்று நடந்து சென்ற சித்ராவை ஈர்த்தது அருகிலிருந்த மண்பானை சட்டிகள் விற்ற கடை. அங்கிருந்த மண்ணால் செய்த  குட்டிபானை, சிறு அடுப்பு போன்ற சொப்பு  சாமான்களைப் பார்த்த சித்ரா  வுக்கு  சிறுவயதில் இங்கு வந்தபோது இவற்றை வாங்கி எல்லோருமாக விளையாடியது நினைவு வந்தது. அடுப்பில் தோட்டத்திலிருந்து பொறுக்கிய சிறு குச்சிகளை வைத்து எரியவிட்டு சாதம் வடித்தது நினைவு வர அந்த சொப்புகளை விலைக்கு
வாங்கிக் கொண்டாள்.

சுரேஷ்..என்ன பழைய நினைவா?..என்றபடியே வர, காரில் ஏறிக் கிளம்பினார்கள்.அவர்கள் வீடு பழைய மாதிரியே தூணும் நீண்ட திண்ணையுமாக அப்படியே இருந்தது. அவள் தாத்தா காலத்திற்குப் பின் சுரேஷின் அப்பா வீட்டை விற்றுவிட வாங்கியவர்கள் அங்கு வேறு குடி வைத்துவிட்டு வெளியூர் சென்று விட்டதாகச் சொன்னார்கள். 

அவர்கள் அனுமதியுடன் வீட்டினுள் சென்று பார்த்தவள் அந்த நாளுக்கே சென்று
விட்டாள். முற்றம், தாவாரம், கூடம்,சமையலறைகொல்லையில் மாட்டுக் கொட்டகை எல்லாம் அப்படியே இருந்தது. மாடிக்கு சென்றவள் அங்கி
ருந்து தூரத்தில் தெரியும் உயர்ந்த ஆலய கோபுரத்தைப் பார்த்தவள், அதன் பிம்பத்தை விரல்களில் அடக்க எல்லோரும் முயற்சி செய்ததும்,சுரேஷால் மட்டுமே அப்படி செய்ய முடிந்ததையும் அவனிடம் சொல்ல..அது மட்டுமா? நீயும் இப்போ என் கைகளுக்குள்ளதானே?..என்று காதலுடன் பார்க்க வெட்கத்துடன் விலகினாள்!

பின்புறமிருந்த பெரிய மரங்களடர்ந்த தோட்டத்தை சுற்றிப் பார்த்தவளின் கண்கள் கீழே பார்க்க அவளும் கீர்த்தனாவும் கைப்பிடித்து நடப்பது  நிழலாகத் தெரிய, அன்றைய நிஜங்களும் நினைவுகளும் இன்று மனதில் நிழலாடுவது மட்டுமே நிஜம் என்று எண்ணியவளின் காதுகளில்..அம்மா பசிக்கிறது. ஹோட்டலுக்கு போலாமா?..என்ற மகனோடு சுரேஷும் உடன் வந்து..என்ன அந்தநாள் நினைவுகளை மனதில் அனுபவிச்சயா? கிளம்பலாமா?..என்று கேட்க இனியொருமுறை இங்கு வர வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கியபடியே காரை நோக்கி 
சென்றாள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்புள்ள அப்பா 🙏🏼..11.6.'22

மேல்நாட்டு மருமகள்!

குருவாயூருக்கு வாருங்கள்..4