சிற்பியும் சிலைகளும்
#Wtwகதைஎழுது
#wtwstories2021
#April1
சிற்பியும் சிலைகளும்
அந்த சிலைப் பூங்காவை சுற்றிப் பார்த்த சுகுமார் அந்த சிலைகளைச் செய்த சிற்பியைப் பற்றி விசாரித்தான். அவரது வீடு பூங்காவை அடுத்து இருப்பதாக அலுவலகத்தில் சொன்னதைக் கேட்டு அங்கு சென்றான்.
அங்கு அறுபது வயதுக்கு மேலிருக்கும் வயதானவர் சிலைகளை உருவமைத்துக் கொண்டிருந்தார்.
"ஐயா வணக்கம்.நான் சுகுமார். ஒரு பத்திரிகையில் வேலை செய்கிறேன். இந்தப் பூங்காவின் சிலைகள் மிக அழகாக தத்ரூபமாக செதுக்கியுள்ளீர்கள். உங்களைப் பற்றி எங்கள் பத்திரிகையில் எழுதலாமா?"
"எழுதிக்குங்க தம்பி. என்பேர் கதிரேசன். என்ன விபரம் வேணும்னு சொல்லுங்க தம்பி."
"இது என்ன கடவுள்? ரொம்ப அழகா செஞ்சிருக்கீங்க."
"அது சுவாமிமலை சுவாமிநாத சுவாமிப்பா. அப்பாவுக்கே பாடம் சொல்லிக் கொடுத்த பிள்ளை. அந்த ஊர் சிற்பக்கூட ம் ரொம்ப பிரசித்தம். அங்கிருந்த ஸ்தபதிகள் செஞ்ச கடவுள் சிலைகள் பல நாட்டு கோவில் கர்ப்பக்கிரகங்களில் இருக்கு. அங்க எங்கப்பா முருகேச ஸ்தபதி சிலை செதுக்க கத்துகிட்டு பல கோயில்களுக்கு சுவாமி சிலைகள் பண்ணிக் கொடுத்திருக்காரு."
"நீங்க எப்படி சிலை செதுக்க ஆரம்பிச்சீங்க?"
"எங்கப்பாகிட்டதாம்பா கத்துக்கிட்டேன்.எங்கள் குலத் தொழில் இது. கனடாவிலருந்து பிருந்தானு ஒரு அம்மா இந்தசுவாமிநாதசுவாமி சிலையின் அழகில மயங்கி இதுபோல சின்ன அளவில செய்து தரச் சொல்லி வாங்கிட்டு போனாங்க."
"இங்குள்ள சிலைகள் எல்லாமே நீங்க செய்ததா?"
"ஆமாம். கற்சிலைகள் எல்லாமே நான் செய்ததுதான்.ஒவ்வொண்ணுக்கும் ஒரு கதை இருக்கு."
"அப்படியா? ஆச்சரியமா இருக்கு ஐயா! அந்த சிலைகள் எந்த நேரம் எப்படி செஞ்சதுனு சொல்ல முடியுமா?"
"எனக்கு புத்தரை ரொம்பப் பிடிக்கும். புத்தர் சிலைகள் பல தத்துவங்களை நமக்கு சொல்லும். அதை பல வடிவங்களில் நான் செய்திருக்கேன்."
"இந்தப் பெண் யாரு? ஏதாவது ராஜகுமாரியா?"
கதிரேசன் கண்கலங்கி சில நிமிடம் பேசவில்லை.
"இது என் ஒரே பெண்ணின் நினைவாக நான் செதுக்கிய உருவம். அவள் ரொம்ப அழகா ராஜகுமாரி மாதிரி இருப்பா. என்னை ஒரு சிலை செய்வியாப்பானு அடிக்கடி கேட்பா. பத்தாம் வகுப்பு படிக்கும்போது விஷஜுரம் வந்து போயிட்டா. அதே ஏக்கத்தில என் மனைவியும் 4 வருஷத்தில போயிட்டா.நான் இப்போ தனிக்கட்டைப்பா"
பழைய நினைவுகளில் ஆழ்ந்தவர் சற்று சுதாரித்துக் கொண்டு.."உயிரோட இருந்தபோது நான் செய்யாத என் மகள் சிலையை அவ போனப்பறமாதான் செய்ய முடிஞ்சது."
"வருத்தப் படாதீங்க ஐயா. இது புது விதமா இருக்கே? இதற்கு என்ன பொருள் ஐயா?"
"நாம் நிலாவை பெண்ணாகதானே சொல்லுவோம். ஆனால் நிலாவின் பெயர் சந்திரன் என்பது ஆண் பெயர்தானே? அதனால் நிலவை ஆணாக்கி, அதில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பது மாதிரி புதுவிதமாக செய்தேன். இதுதானே நிலாப்பெண். சரிதானே" என்று சொல்லி சிரித்தார்.
"இந்த முகம் யாருடையது ஐயா?"
"அவர்தான் எனக்கு குருவுமான அப்பா. அவருடைய புகைப்படம் கிடையாது. அதனால் அவரை சிலையாக வடித்தேன். அவரை வணங்கிதான் நான் தினமும் வேலைகளை ஆரம்பிப்பேன்".
"உங்களை சில புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாமா?"
"தாராளமா" என்று சொன்னவரிடம் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு கிளம்பியவனிடம்.."நீயும் வந்து என்கூட சாப்பிடலாம்.வா" என்றார்.
"உங்களைப் பற்றிய கட்டுரையுடன் இன்னொரு நாள் வரேன்யா. என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க."
கருத்துகள்
கருத்துரையிடுக