சார்தாம் யாத்ரா.. 1. ஹரித்வார்
சார்தாம் யாத்ரா..
1. ஹரித்வார்
இந்தியாவின் பல புண்ய க்ஷேத்திரங்களையும் தரிசித்த
எனக்கும் என் கணவருக்கும் பத்ரி, கேதார் தரிசிக்கும் ஆவல் இருந்தது. ஆனால் அங்கெல்லாம் நிறைய மலை ஏற வேண்டும், போனி என்னும் குதிரைகளில் செல்ல வேண்டும், வானிலை சரியில்லாவிட்டால் தரிசனமே கிடைக்காது என்றெல்லாம் பலர் சொன்னதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டோம்.
2019 அக்டோபரில் என் நாத்தனார் தன் உறவினர்
களுடன் சார்தாம் யாத்ரா செல்வதால் எங்களையும் இணைந்து கொள்ளும்படி கேட்டார். பத்ரி, கேதார் நாதர்கள் எங்களுக்கு தரிசனம் கொடுக்க மனம் வைத்ததால் கொஞ்சம் தயக்கத்தோடும், அதிக பயத்துடனும் இணைந்து கொண்டோம்.
இறைவன் எங்களை ஆட்கொண்டு அருளியதை இப்போது எங்களால் உணர முடிகிறது. 2020 பிப்ரவரி முதல் கொரோனா தாக்கம் ஆரம்பித்து இன்றுவரை தொடர்வதை நினைக்கிறேன். எங்களுடையது வருடத்தின் கடைசி ட்ரிப். தீபாவளிக்கு பின் குளிரினால் எல்லா ஆலயங்களும் மூடப்பட்டு பின் ஏப்ரலில்தான் தரிசனம் ஆரம்பிக்குமாம். எங்களுக்கு தரிசனம் கிடைத்ததை நினைத்து இன்றும் மெய்சிலிர்க்கிறது. இனி எப்போது அங்குள்ள ஆலயங்களை தரிசிக்க முடியுமோ?
பத்ரி, கேதார், யமுனோத்ரி, கங்கோத்ரி இவையே சார்தாம் எனப்படும் க்ஷேத்திரங்கள். இவற்றுடன் அருகிலுள்ள ஹரித்வார், ரிஷிகேஷ், மனா கிராமம், பஞ்ச பத்ரி, பஞ்ச கேதார் தலங்களும் அதில் அடங்கும். 12 நாட்கள் யாத்திரையில் சென்று தரிசித்து வந்தோம். அது பற்றிய விபரங்களை என் அனுபவத்தை இக்கட்டுரைகள் மூலம் எழுதியுள்ளேன். இந்தக் கட்டுரைகள் கல்கி தீபம் இதழில் தொடர்ந்து பிரசுரமாகியது.
முதலில் நாங்கள் சென்றது
ஹரித்வார். உத்தர்கண்ட் மாநிலத்தில் கடல்மட்டத்தி
லிருந்து 950 அடி உயரத்தில் உள்ள சிவாலிக் குன்றுகளின் அடிவாரத்தில் கங்கை நதியின் கீழ்கரையில் சமவெளியில் அமைந்துள்ளது ஹரித்வார். இது மிகவும் புராதனமான, புனிதமான நகரம்.
கங்கோத்ரியில் புறப்பட்ட கங்கை கிட்டத்தட்ட 320 கிலோமீட்டர்கள் ஹிமாலயத்தில் பல இடங்களைக் கடந்து இங்கே வந்து சேர்கிறாள். இங்கே கிட்டத்தட்ட 1 மைல் அகலத்தில் பயணிக்கிறாள் கங்கை. ஹிமாலயக் கோவில்களின் நுழைவாயில் ஹரித்வார். இங்கிருந்துதான் சார்தாம் யாத்திரை துவங்குகிறது. இந்தத் தலத்திற்கு கங்காத்வாரம், மாயாபுரி என்கிற பெயர்களும் உண்டு.
இங்குள்ள கங்கைக்கரை ஹரிகி பவுரி (Hariki Pauri) எனப்படும். ‘ஹரி’ என்றால் விஷ்ணு; ‘பவுரி’ என்றால் ‘பாதம்’. இந்த இடம் ‘ஹரிகி பவுரி’ (விஷ்ணுவின் பாதம்) என்று வழங்கப்படுகின்றது. பத்ரி நாத்திலிருந்து ஹரித்வார் வரை உள்ள விஷ்ணுவின் பாதம் ஹரித்வாரின் கரையில் ஆரம்பிப்பதாக நம்பிக்கை.
இங்கே தினமும் மாலை வேளையில் விஷ்ணுவின் பாதத்தை வழிபடும் விதமாகக் கங்கைக்கு ஆரத்தி எடுக்கிறார்கள். கரையில் இருக்கும் பல கோவில்களிலும் பெரிய மணிகளை அடித்தபடியே விஷ்ணு, சிவன், கங்கையைப் பாடியவாறு ஆரத்தி காண்பித்து வழிபடுகிறார்கள். கரை முழுவதும் பெரிய பெரிய தீபங்கள் காண்பிக்கப்
படுகின்றன. தெய்வீகம் நிலவும் அந்த நேரம் நம் மனம் மெய் மறந்து போகிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் கங்கையின் இரு கரைகளிலும் கூடி தீபாராதனை செய்து வழிபடுவது காணக் கண்கொள்ளாக் காட்சியாக நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது.
ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா நடக்கும் ஹரித்வாரில் கோவில்களுக்கு பஞ்சமில்லை.
மாயாதேவி கோவில்,மானஸாதேவி, சண்டிதேவி கோவில் ஆகியவை இங்குள்ள புகழ்பெற்ற ஆலயங்கள். மாயாபுரி என அழைக்கப்படும் சக்திபீடங்களில் ஒன்று மாயாதேவிகோயில்.
சக்திதேவி தன் தந்தையின் யாகத்திற்கு சிவனின் வார்த்தையை மீறிக் கொண்டு சென்ற வரலாறு நாம் அறிந்ததே. அங்கு மனமுடைந்து இறந்த சக்தியின் உடலை சிவபெருமான் தூக்கிக் கொண்டு கைலாயம் சென்றபோது பூமியில் விழுந்த அவள் அங்கங்களே சக்திபீடங்கள் எனப்படும்.
அவளது மேல்பகுதி விழுந்த இடமே இவ்வாலயம்.
'அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகாபுரி
த்வாரவதி சைவ ஸப்தைத்தே மோக்ஷதாயகா' என்ற ஏழு மோக்ஷபுரிகளில் இதுவும் ஒன்று. அழகிய கோவில். சந்நிதியில் காளிதேவி
காமாக்யா தேவிக்கு நடுவில் எழிலாகக் காட்சி தருகிறாள் அன்னை மாயாதேவி.
இங்கு மலைமேல் அமைந்திருக்கும் மானஸாதேவி, சண்டிதேவி ஆலயங்களும் சக்திபீடங்களாகும். பீடங்களில் ஒன்றான மானஸாதேவி கோயில் சித்த பீட முக்கோணத்தின் உச்சியில் அமைந்துள்ளது. மாயாதேவி, சண்டி தேவி மற்றும் மானஸா தேவி ஆகிய மூன்று தேவிகளும் இணைந்து முக்கோணமாக உருவாக்கப்
பட்டிருக்கிறது.மலையிலுள்ள இவ்வாலயங்களுக்கு செல்ல ரோப்கார் வசதி உள்ளது.
காஸ்யப முனிவரின் மனதில் தோன்றியதால் அம்மனுக்கு மானஸா தேவி என்று பெயர். பக்தர்களின் வேண்டுதல்
களை உடன் நிறைவேற்றி வைப்பதாலும் இப்பெயர். வாசுகி நாகரின் மனைவியாக மானஸா தேவி வணங்கப்
படுகிறார். ஷிவாலிக் மலைகளில் உள்ள 'பில்வா பர்வத்' என்ற இடத்தில் இவ்வாலயம் உள்ளது. மானஸா தேவியின் இரண்டு சிலைகளில் ஒன்றிற்கு ஐந்து கைகளும், மூன்று வாய்களும் மற்றொன்றிற்கு எட்டு கைகளும் அமைந்துள்ளது.
சண்டிதேவியின் ஆலயம் 'ஹரிகி பவ்ரி' என்ற இடத்திலிருந்து 4 கி.மீ.தூரத்தில் உள்ளது. சண்டி தேவி ஆதி சங்கரரால் 8 ஆம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டு 1929 ஆம் ஆண்டு காஷ்மீர் மன்னரால் இந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டது.
சும்பன் நிசும்பன் என இரண்டு அரக்கர்களை அழிக்க சக்தி சண்டிதேவியாக அவதரித்து அவர்களை அழித்தபின் இம்மலையில் ஓய்வு எடுக்கிறாள். இஙகுள்ள இரு சிகரங்கள் சும்ப நிசும்பன் என்ற பெயரில் உள்ளன.
வைஷ்ணோ தேவி கோவில், பாரத் மாதா கோவில், தக்ஷமகாதேவர் கோயில், சப்தரிஷி ஆஸ்ரமம் என தரிசிக்க பல ஆலயங்கள் உள்ளன. ஆனால் நேரமின்மையால் நாங்கள் மேற்குறிப்பிட்ட ஆலயங்கள் மட்டுமே தரிசித்தோம்.
தொடரும்..
ராதாபாலு
கருத்துகள்
கருத்துரையிடுக