சார்தாம் யாத்ரா..10

 



யமுனோத்ரி தாம்

யமுனோத்ரியை தரிசனம் செய்வது ஒரு சவாலாக இருந்தது. பத்ரி, கேதார், 

கங்கோத்ரியை அடுத்து யமுனோத்ரி நான்காவது புண்ணியத்தலம்.  இமயமலையில் கார்வாலில் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 3300 மீட்டர் (10800 அடி) உயரத்தில் யமுனோத்ரிக்கு மேல் 4400 மீட்டர் உயரத்திலுள்ள சம்பஸார் கிளேசியரிலிருந்து தன் நீண்ட பயணத்தைத் துவங்கும் யமுனை, இமயமலைச் சாரலில் பல இடங்களைத் தன் மென்மையான கரங்களால் தழுவியபடியே நிதானமாக, அமைதியாக, அழகாக, ஆரவாரமின்றிச் சென்றுகொண்டிருக்கிறாள். அந்த யமுனோத்ரியே  யமுனையின் ஆலயம் அமைந்துள்ள சார்தாம்களில் ஒன்று.


அசீத முனிவர் நாள்தோறும் கங்கையிலும் யமுனையிலும் குளித்துத் தவம் செய்யும் வாழ்வை மேற்கொண்டவர். அவருடைய முதுமைக் காலத்தில் அவரால் கங்கோத்ரி செல்ல முடியாததால் கங்கை நதியே அவருக்காக யமுனோத்ரியாக வந்ததாக நம்பப்படுகிறது.


இத்தகு சிறப்பு வாய்ந்த புண்ணியத் தலமான யமுனோத்ரி, ரிஷிகேஷிலிருந்து சுமார் 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உத்தர் காசி மாவட்டத்தில் இருக்கிறது. டேராடூன், முசோரி, பார்கோட் வழியாக ஜானகிபாய் சட்டி என்ற இடம் வரையில் தான் பேருந்து செல்லும். பின்னர் அங்கிருந்து 6 1/2 கிலோமீட்டர் தூரம் செங்குத்தான கடினமான மலைப்பாதையில் ஏறிச்சென்றால் யமுனோத்ரி அடையலாம். ஜானகிபாய் சட்டியிலிருந்து பார்க்கும்போது பனி சூழ்ந்த இமயமலைச் சிகரங்கள் இளம் வெயிலில் 

பளபளத்துக்கொண்டிருந்தது கண்களைப் பறிப்பதாக இருந்தது. இயற்கையின் அழகு நம்மைக் கட்டிப் போடுகிறது! மலையில் ஏறிச் செல்லும்போது கீழே ஒரு மெல்லிய வெண்மைக் கோடாக காட்சி தருகிறது யமுனை.


மேலே ஏற முடியாதவர்களுக்கு குதிரைகளும், நான்கு பேர் தூக்கிச் செல்லும் டோலிகளும் உள்ளன. குதிரைகளுக்கு 1000 முதல் 1200 வரையும், டோலிகளுக்கு 3500 முதல் 4500 வரையும் ஆகும் என்றார் எங்கள் டூர் மேனேஜர். நாங்கள் சென்றது சீஸனின் கடைசி டூர் என்பதால் அவர்கள் கேட்டதைக் கொடுக்க வேண்டியதாயிற்று. அவர்களுக்கு ஏஜண்டுகள் இருப்பதால் அவர்கள் மூலமே நாம் புக் செய்ய முடியும். 


குதிரையில் செல்ல 1500ரூ. டோலி நான்கு பேர் என்பதால் 5000ரூ. குதிரைக்கு 100ரூபாயும், டோலிக்கு 500ரூ.யும் அரசுக்கு வரி

செலுத்த வேண்டும். 

குதிரைக்காரருக்கு 500ரூ.யும் டோலிக்காரர்களுக்கு 1000ரூ.யும் சாப்பாட்டுக்கு கொடுக்க வேண்டும். மொத்தமாக டோலிக்கு 7000 ரூ. யும், குதிரைக்கு 3000ரூ.கொடுக்க வேண்டியதாயிற்று.சீஸனில் கொஞ்சம்  குறைவாகக் கேட்பார்களாம். மேலே செல்ல குதிரையில் 1 மணி நேரமும் டோலியில் 2 மணி நேரமும் ஆகிறது.


மலை மிகவும் செங்குத்தாக இருப்பதால் ஏற முடியாத

வர்கள் கண்டிப்பாக இப்படித்

தான் மேலே ஏறி இறங்க வேண்டும். எங்கள் குழுவில் காலை 9 மணிக்கு கால்நடையாக ஏறிச் சென்றவர்கள் மாலை 6 மணிக்கு திரும்பி வந்தார்கள். திரும்ப வரும்போது மழை வந்துவிட்டதால் குதிரைகள் இறங்க முடியாமல் வழுக்கி விழுகின்றன. 


என் கணவர் வந்த குதிரை வழுக்கி விழுந்து என் கணவரின் கால் குதிரைக்கு அடியில் மாட்டிக் கொண்டு விட்டதாம். நடக்க முடியாமல் உட்கார்ந்து விட்டாராம். பிறகு குதிரையை சரியாக்கி ஏற்றி வந்ததாக சொன்னார். கால் வீங்கி நடக்க முடியவில்லை. 


நடந்து செல்பவர்கள் குதிரைகளுக்கும், டோலிகளுக்கும் வழிவிட்டுச் செல்லவேண்டும்.நான்கு பேரும் ஒரே மாதிரி கால் வைத்து நிதானமாக செல்கிறார்கள். உயரத்தை பார்க்கும்போது இவர்களுக்கு கால் சறுக்காமல் இருக்கணுமே என்று கடவுளை வேண்டிக் கொண்டேன்.

டோலிக்காரர்கள் சற்று 

ஏற்றமில்லாத பாதைகளில் 

நம்மை இறக்கி விட்டு சற்று தூரம் நடக்கச் சொல்கிறார்கள். அவர்களும் மனிதர்கள்தானே? அவர்கள் தூக்கிச் செல்வது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. 


வழியில் தேனீர், சாப்பாட்டு கடைகளில் இறக்கி அவர்கள் சற்று ஓய்வு எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் டோலியைத் தூக்கி விட்டால் அவர்கள் சாப்பிடும் கடை வந்தபின்தான் நிறுத்துகிறார்கள். நடந்து செல்பவர்கள் ஓய்வெடுக்க வழியில் இருக்கைகளும்,

கழிவறை வசதிகளும் உள்ளன. 


பனியாறுகள் கொண்ட பிரம்மாண்ட பனிமலையாக இமயத்தின் தரிசனம். மனிதனின் அசுரக்கரங்கள் இன்னும் எட்டாத இடத்தில் இருப்பதால், அவனிடமிருந்து தப்பிப் பிழைத்த, மரங்களும், செடிகொடிகளும் கொண்ட பசுமையான பிரதேசம் கண்களுக்கு இதத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. ஒரு பக்கம் நெடிதுயர்ந்த மலையும் மறுபுறம் அதல பாதாளமுமாக இயற்கையின் எழிலான காட்சி நம்மைப் பிரமிக்க வைக்கிறது. மலையில் பிறந்து மண்ணில் இறங்கி நம்மை வாழவைக்கும் நதிகளின் பெருமையும் சிறப்பும் சொல்லி மாளாது.  இத்தனை நதிகள் இருந்தும் தண்ணீருக்கு நாம் படும் கஷ்டம் ஏன்? பதில் தெரியாத கேள்வி.


செல்லும் வழியில் ராமர், பைரவர் ஆலயங்கள் உள்ளன. நான் டோலியில் சென்றதால் பார்க்கும் பரவசக் காட்சிகளையும் இயற்கை அன்னையின் எழிலான தோற்றத்தையும் கண்களுக்குள் படம் பிடித்ததோடன்றி என்றும் காணும் விதமாக மொபைலிலும் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் பதிந்து கொண்டேன்.


அங்கு இறக்கி விட்டு அவசர அவசரமாக சந்நிதியைக் காட்டிவிட்டு 'இதற்கு மேல் ஒன்றுமில்லை. கீழே போகலாம்'என்று அவசரப் படுத்துகிறார்கள்! என் கணவர் குதிரையில் சென்றதால் முன்னால் சென்று தரிசனம் செய்து விட்டார். அவரைத் தேடிப் பிடித்து அவருடன் சென்று ஆலயத்தை தரிசனம் செய்த பின்பே திரும்ப வந்தேன். என் நாத்தனாரையும் அவர் சம்பந்தியையும் ஆலயத்தைக் கூட சரியாக தரிசிக்க விடாமல் அவசரமாக அழைத்து வந்து விட்டதாக குறைப் பட்டார்கள். இவ்வளவு பணம் கொடுத்தும் டோலிக் காரர்கள் செய்வது அநியாயமாக இருக்கிறது.


யமுனை நதி தெளிவாகப் பளிங்குபோலும், சற்றே இளம்பச்சை நிறத்தோடும் அசைந்து வளைந்து நெளிந்து அழகாக ஓடிவருகிறாள். அருகிலேயே யமுனைக்கான ஆலயம் அமைந்துள்ளது. கீழே படிகளில் இறங்கிச் சென்றால் யமுனை நதி. கங்கை சரஸ்வதி போலின்றி சாதுவாக ஓடும் நதியில் நீரும் அதிகமில்லை. மேலே கிளேசியர்கள் உருகி வரும்போது நிறைய தண்ணீர் இருக்குமாம்.  


கங்கைக்கு அடுத்தபடியாக புண்ணிய நதியாக விளங்குவது யமுனை ஆகும். யமுனா, ஜாமுனி முனிவர் துதி செய்ததால் ஜமுனா, 

யமனின் சகோதரி

யானதால் யமி,  காளிந்தன் என்னும் தந்தை சூரியனின் 

பெயரால் காளிந்தி என்னும் பல நாமங்கள் யமுனைக்கு உள்ளது.


ஒரு சமயம் சகோதரன் யமதர்மராஜன்..சகோதரியே! நான் உனக்கு சீதனமாக ஏதும் தரவில்லை ஏதாவது வரம் கேள்.. என்று கூற யமுனையானவள்..அண்ணா எனக்கு ஒன்றும் வேண்டாம், எனது நீரில் நீராடுபவர்களுக்கு உன்னுடைய யமபயம் இருக்கக் கூடாது..என்று வரம் கேட்க யமதர்மராஜனும் அவ்வாறே அருளிச் செய்தார். எனவே தமது பாவங்களை தொலைக்கவும் யமபயம் நீங்கவும் பக்தர்கள் யமுனோத்திரிக்கு புண்ணிய யாத்திரை செய்கிறார்கள்.


யமுனோத்ரியில் பயங்கர குளிர். தண்ணீரைத் தொட்டாலே கைகள் குளிரில் மரத்துப்போகிறது.இதற்கு அருகில் எப்படி ஒரு வெந்நீர் ஊற்று என்று இயற்கையை நினைக்க  ஆச்சரியமாக உள்ளது. யமுனைத் தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டு பாட்டிலில் நிரப்பிக் கொண்டோம். 


அங்குள்ள சூர்யகுண்டம் என்ற வெந்நீர் ஊற்றுக் குளம் படு பயங்கர நாற்றம். மேலே ஒரு கழிவறைதான் உள்ளது.

அதுவும் சரியில்லாததால் வெந்நீர் ஊற்றை அசுத்தப் படுத்தி விட்டார்கள் போலும்.   அதில் எங்கிருந்து குளிப்பது?  


அருகிலுள்ள யமுனாபாய் குண்டத்திற்கு சென்றோம்.

சூரிய குண்டத்தின் அருகில் உள்ள 190°F.ல்  கொதிக்கும் நீரூற்று  'யமுனாபாய் குண்டம்' என்று அழைக்கப்படுகிறது. அங்கே யமுனையின் 'திவ்ய சிலா' பூஜிக்கப்படுகிறது. அங்குள்ள பண்டா என்ற  புரோகிதர்கள்   நாம் கொடுக்கும் அரிசியையும், உருளைக்கிழங்கையும்  ஒரு மெல்லிய துணியில் கட்டி  அந்த குண்டத்தில் 15 

நிமிடங்கள்  வைத்துக் கொள்கிறார்கள். அது ஓரளவு வெந்ததும் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். அந்த அரிசியைக் காயவைத்து பாயசம் செய்து சாப்பிட சொல்கிறார்கள். ஆனால் அது மறுநாளே துர்நாற்றம் அடித்ததால் கங்கையில் போட்டு விட்டோம்! அங்குள்ள கடைகளில் அரிசி, உருளைக் கிழங்கு விற்கிறார்கள். 


அடுத்து யமுனையின் ஆலயதரிசனம். யமுனை சூரியனின் மகள். யமனின் சகோதரி. இவளை வணங்கு

வதால் யமபயம் இன்றி கஷ்டமில்லாத மரணம் சம்பவிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலே வெகு உயரத்தில் இருந்த யமுனையின் ஆலயத்துக்கு யாரும் எளிதில் போக முடியா

ததால் இவ்வாலயத்தை தேஹ்ரி அரசர் நரேஷ் சுதர்சன் ஷா  1839ம் ஆண்டு

யமுனோத்ரியில் உருவாக்கி

னார்.


கருப்பு பளிங்குக்கல் விக்ரஹமாக கூர்ம வாகினியாகிய யமுனை இங்கே பத்மாஸனத்தில் அமர்ந்த கோலத்தில்  வெண்ணிற கங்கை மற்றும் சரஸ்வதியுடன் உற்பத்தி ஸ்தானத்தை நோக்கிய கோலத்தில் அருட்காட்சி தருகின்றாள். தீபாவளிக்கு அடுத்தநாளான யமதிவிதியை அன்று உற்சவ விக்ரகம் கீழுள்ள கர்சாலி என்ற இடத்திலுள்ள ஆலயத்துக்கு பல்லக்கில் விமரிசையாக எடுத்துச் சென்று பூஜிக்கப்படும். ஆறு மாதங்களுக்கு பின்பு அட்சயதிருதியை அன்று திரும்ப யமுனோத்ரிக்கு செல்லும்.


நான்கு தாம்களில் யமுனோத்ரி செல்வது சற்று கடினமாகவே உள்ளது. ஜானகிபாய் சட்டியிலிருந்து பாதை மிக குறுகலாகவும் மேடுபள்ள

மாகவும் உள்ளது. தெரு விளக்குகளும் குறைவு. நடந்து போனவர்கள் தாமதமாக வந்ததால் நாங்கள் திரும்பும்

போது 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது. 


பகலில் மயக்கும் இயற்கை அழகு இருளில் எதையும் ரசிக்க முடியாமல் நம்மை மிரட்டுகிறது. நல்லபடி போய்ச்சேர வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது. பேருந்து ஓட்டுனர்கள்தான் தெய்வமாகத் தெரிகிறார்கள். அவர்கள் திறமைக்கு தலை வணங்க வேண்டும். 


இந்த நான்கு தலங்கள் தவிர நாம் தரிசிக்க வேண்டிய சில முக்கியமான ஆலயங்களை பற்றி தொடர்கிறேன்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சார்தாம் யாத்ரா..14

சார்தாம் யாத்ரா..9

சார்தாம் யாத்ரா..13