நிர்ஜலா ஏகாதசி..21.6.'21
ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா மற்றும் பீம ஏகாதசி எனப்படும். பீமன் இந்நாளில் நீர் கூட அருந்தாமல் விரதமிருந்து, மறுநாள் துவாதசியிலேயே உணவு ஏற்றதால், நிர்ஜலா ஏகாதசிக்கு மறுநாள் பாண்டவ துவாதசி என்று பெயர்.
ஒருநாள் பீமன் வியாசரிடம் "குருவே, ஏகாதசி விரதம் மிகவும் முக்கியமாகக் கடைப்பிடிக்கவேண்டிய விரதம் என்கிறார்கள். அன்னை குந்தி, அண்ணன் யுதிஷ்டிரர், திரௌபதி, அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என எல்லோரும் தவறாமல் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்கி
றார்கள்.ஆனால் என்னால் ஒருவேளை கூட சாப்பிடாமல் இருக்க முடியாதே”என்றான் பீமன்.
"ஏகாதசி விரதம் நினைத்ததை நிறைவேற்றும். முயற்சி செய்து பார்".
"குருவே. வருடம் ஒரு ஏகாதசி நான் நீங்கள் சொன்னபடி விரதம் இருக்கிறேன். அதில் எல்லா ஏகாதசி பலனும் எனக்கு கிடைக்க வேண்டும்".
"அதற்கும் ஒரு வழி உண்டு பீமா. ஆனி மாத வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி எனப்படும். அன்று தண்ணீர் கூடக் குடிக்காமல் விரதம் இருந்தால் எல்லா ஏகாதசி பலனும் அடையலாம்" என்றார்.
"அதன் முறை என்ன குருவே?"
"அதிகாலையில் எழுந்து நீராடி அந்த வாசுதேவனை வணங்கி நாள் முழுவதும், `ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்று உச்சரித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இந்த நாளில் முடிந்த அளவுக்கு தான தருமங்கள் செய்ய வேண்டும். இன்று தானம் செய்யும் செல்வம் பல மடங்காகப் பெருகி நம்மிடம் வந்து சேரும். இரவிலும் கோவிந்தனையே சிந்தித்திருக்க வேண்டும். மறுநாள் துவாதசி திதி தொடங்கும் வேளையில் பகவான் விஷ்ணுவை வணங்கி துளசி தீர்த்தம் அருந்தி இந்த விரதத்தை முடிக்கலாம்” என்றார் வியாசர்.
பீமசேனன், குருவின் வாக்கை வேதவாக்காகக் கொண்டு இந்த விரதத்தை முடித்தான். அதனால் அவனுக்குப் புண்ணிய பலன்கள் கிடைத்தன. பீமனே உணவை விட்டு உபவாசித்த ஏகாதசி என்பதால் அந்த ஏகாதசிக்கு பீம ஏகாதசி என்றும் மறுநாள் பாண்டவ துவாதசி என்றும் பெயர் உண்டானது.
நிர்ஜல ஏகாதசி தண்ணீரின் முக்கியத்துவத்தைக் கூறுவதால் குளிர்ச்சியான பொருட்களை தானம் செய்வது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.
இந்நாளில் துளசியை வணங்க வேண்டும். துளசி செடிக்கு அடியில் ஒரு நெய் தீபம் ஏற்றி விஷ்ணு பகவானை வணங்கினால் வீட்டின் செல்வம், புகழ் மற்றும் பெருமை அதிகரிக்கும்.
நிர்ஜல ஏகாதசி விரதம் இருந்தால், இதுவரை செய்த பாவங்கள் நீங்கி, நற்பலன்கள் கிடைக்கும். நோய்கள் நீங்கும். அனைத்து செல்வங்களும் கிடைக்கும். பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். முக்கியமாக நிர்ஜல ஏகாதசி விரதம் இருந்தால், 24 ஏகாதசி விரதங்களின் பலனைப் பெறலாம்.
இன்றைய நிவேதனம்..பயத்தம்பருப்பு பாயசம்..அவல் கேசரி.
கருத்துகள்
கருத்துரையிடுக