சார்தாம் யாத்ரா..3

 மகாபாரதம் பிறந்த இடம்!

(மனா கிராமம் பத்ரிநாத்)


ஹரித்வாரில் ஷாப்பிங் மிக அருமை. படா பஜார் என்ற இடத்தில் பலவிதமான கைவினைப் பொருட்கள், அழகிய கைப்பைகள், ஸ்வெட்டர்கள், ராதா கிருஷ்ண விக்ரகங்கள், அவற்றிற்கான அழகான உடைகள் எல்லாம் நியாயமான விலையில் கிடைக்கிறது. Imitation jewelleryகளும் அழகான டிசைன்களில் விற்கப்படுகிறது. எல்லா இடத்திலும் bargain செய்து வாங்கலாம்! 


இருபது ரூபாய் விலையில் பல வண்ணங்களில் கிடைக்கும் மணிமாலைகள் மிக அழகு. எந்த டிரெஸ்ஸுக்கும் பொருந்துகிறது. என் புடவை கலர்களுக்கு ஏற்றபடியும் என் பேத்திகளுக்கும்  நிறைய வாங்கினேன்!


ஹரித்வாரிலிருந்து நேராக பத்ரிநாத் சென்றோம். 10000அடிக்கு மேல் அமைந்துள்ளதால் குளிர் நடுக்கி எடுத்து விட்டது. ஸ்வெட்டர் ஷால் கோட் எல்லாம் போட்டும் அடங்காத குளிர்! 


பத்ரிநாத் ஆலயத்தில் மாலையில் நடைபெறும் விஷ்ணுசகஸ்ரநாம தரிசனத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததால் நாங்கள் இரவு  தங்கிவிட்டு காலை மனா கிராமத்திற்கு சென்றோம். இது இந்தியாவின் கடைசி கிராமம். 


சரஸ்வதி நதியை நாம் எங்கும் காணமுடியாது. அலகாபாத்தில் திரிவேணி சங்கமத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல் சரஸ்வதி நதி கலப்பதாக ஐதிகம். இவள் பிறந்த இடம்தான் பத்ரிநாத்திற்கு அருகில் இருக்கும் இந்தியாவின் மனாகிராமம்!


மூன்று கிலோமீட்டர் தொலைவில் திபேத்திய எல்லையில் உள்ள  இந்தியாவின் கடைசியிலுள்ள  இக்கிராமத்தில் ஒரு இயற்கை அழகு மிகுந்த இடத்தில் சரஸ்வதி நதியின் தோற்றுவாய் உள்ளது.


அது மட்டுமா? வேத வியாசர் மகாபாரதம் சொல்ல அதை விநாயகப் பெருமான் எழுதிய புனித இடமும் இதுதானாம். 

பஞ்ச பாண்டவர்கள் சுவர்க்கம் சென்றதும் இங்கிருந்துதான் என்கிறது புராணங்கள். இதுபோல் ஏகப்பட்ட புனிதங்கள்!  இவற்றைக் கேட்டபோது நம்மையறியாமல் ஒரு ஈர்ப்பும் மெய்சிலிர்ப்பும் ஏற்படுகிறது.


மலைப்பாதை முழுதும் நம்முடன் ஓடிவரும்  அலகானந்தா நதியின் அழகில் என்னை மறந்தேன் நான்! 

மேட்டிலும் பள்ளத்திலும் பாறையிலும்  குதித்தும் கும்மாளமிட்டும் குதூகலித்தும் ..இது என் ராஜ்யம்..என்று மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து ஓடும் நதியாக நாமும் ஆகமாட்டோமா என்ற ஆசை ஏற்படுகிறது! அந்த அழகை எத்தனை வார்த்தைகளில் வடித்தாலும் நேரில் அனுபவித்தாலே உணர முடியும். காணக் கண் கொள்ளா காட்சி!


உயரமாக செங்குத்தான மலைமீது செல்ல படிகள் ஏறுவது சற்று கடினமாக இருந்தாலும் நம்முடன் இருக்கும் இயற்கையின் அழகில் அந்த சிரமத்தை மறக்கிறோம். வழியெல்லாம்  ஸ்வெட்டர் பனிக்குல்லா கடைகள்; தேனீர் ஹோட்டல்கள். குளிரும் அதிகம். அந்தக் குளிருக்கு தேனீர் இதமாக இருக்கிறது.


அங்குள்ள மக்கள், பெண்களும் கூட  முதுகில் கூடைகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் மட்டுமன்றி கேஸ் சிலிண்டர்களையும் தூக்கிச் செல்வது ஆச்சரியமாக உள்ளது. இவர்களுக்கெல்லாம் முதுகு முழங்கால் வலிகள் வராதோ? நமக்கு சமதரையிலேயே வருகிறதே!  அந்த மாசில்லாத சுற்றுச்சூழ்நிலை அவர்கள் ஆரோக்யத்தையும் பாதுகாக்கும் போலும்!


முதலில் யானைமுகன் விநாயகனின் 'கணேஷ் குஃபா' என்ற குகை.வியாச முனிவரின்

வேண்டுகோளுக்கு இணங்கிமகாபாரதத்தை எழுதுமுன் விநாயகர் அவரிடம்...தான் எழுத ஆரம்பித்தால் நிறுத்தாமல் எழுதுவேன் என்றும் சற்றும் இடைவெளி தராமல் தொடர்ந்து பாரதத்தை சொல்ல வேண்டும்... என்றும் ஆணையிடுகிறார்.


கணநாதரின் எழுத்தாணி

அடிக்கடி உடைந்து போகிறது.

வியாசரிடம்  கூறியபடி விரைவாய்எழுதத் தனது தந்தத்தையே எழுத்தாணியாக மாற்றிப் பாரதம் முழுவதையும் எழுதிய விநாயகர் இவர் என்று கூறுகிறார்கள். குகையில் குனிந்து விநாயகரை தரிசித்து வியாசகுகைக்கு சென்றோம்.


மகாபாரதம் இயற்றிய வியாசர் வீற்றிருக்கும் குகைக்கு மேலும் சில படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மஹாபாரதம் எழுதிய பிறகு வியாசர் மன சஞ்சலத்துடன் இருந்தபோது, நாரதர் ஆலோசனைப்படி மானுடரின் மோக்ஷத்திற்காக பாகவதம் எழுதிய இடம்தான் வியாச குகை என்று நம்பப்படுகிறது. இது 5300 வருடங்களுக்கு மேல் பழமையானது. இங்கு விநாயகர், சுகர், வல்லபாச்

சாரியார் சிற்பங்களும் பழமை

மாறாமல் உள்ளன.


மகாபாரத ஏட்டுச்சுவடியும்

ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துப் போற்றப் படுகிறது.கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்புள்ள அப்பா 🙏🏼..11.6.'22

மேல்நாட்டு மருமகள்!

குருவாயூருக்கு வாருங்கள்..4