சார்தாம் யாத்ரா..5
பாவம் போக்கும் பத்ரிநாத்
சார்தாம் யாத்திரையில் முக்யமான தலம் பத்ரி நாராயணன் தவக் கோலத்தில் அருட்காட்சி தரும் பதரியாச்ரமம் எனப்படும் பத்ரிநாத். இது 99வது திவ்யதேசம். அஷ்டாக்ஷர மந்திரத்தை உலகுக்கு உபதேசிக்க பெருமாள் வந்த இடம்.
அலகநந்தா நதிக் கரையின் வலது கரையில் நர நாராயணச் சிகரங்களுக்கு இடையே உள்ளது தொன்மை வாய்ந்த பத்ரிநாத் ஆலயம். திருக்கோயிலுக்குப் பின் புறம் உயர்ந்த நீலகண்ட சிகரம் காணப்படுகிறது
பத்ரிநாத், உத்தர்கண்ட் மாநிலம் சமோலியிலிருந்து கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்கு செல்ல நான்கரை மணிநேரம் ஆகிறது. பாதை மிக மிக மோசமாக உள்ளது. ஒரே பாதைதான், அதுவும் ஒரு பஸ் செல்லும் அளவுதான் உள்ளது. இந்தப் பாதையில்தான் இருவழிப் பயணங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வாகன ஓட்டுனர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு பக்கம் அதலபாதாளமும், ஒரு பக்கம் உயர்ந்த மலைச்சாரல்களும் என்று இந்தச் சாலை ஓட்டுனர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. எங்கள் ஓட்டுனர் முகமதியர். மிக அருமையாக ஓட்டினார். பள்ளத்தாக்குகளின் பக்கம் ஓரமாக பஸ் செல்லும்போது நமக்கு கதி கலங்குகிறது. அந்த பகவானே கதி என்று ஸ்லோகங்கள் சொல்லிக் கொண்டே சென்றோம்.
கடந்த 2013 வெள்ளத்தில் நிலச்சரிவுகளினால் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளதால், இச்சாலையில் செல்வது ‘கரணம் தப்பினால் மரணம்’ என்கிற நிலையில் உள்ளது. ஆறு வருடங்களாகியும் சாலைப் பணிகள் இன்னமும் நடந்துகொண்டிருப்பதால், வாகனங்கள் மிக மிக மெதுவாக செல்கின்றன.
உயர்ந்த பனி மூடிய மலைச்சிகரங்கள், அடர்ந்த காடுகள், வெள்ளிக் கோடுகளாய் மலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகள், சிற்றோடைகள், சில இடங்களில் நிதானமாகவும், சில இடங்களில் ஆக்ரோஷமாகவும் ஓடிவரும் ஆறுகள்,வளைந்து நெளிந்து போகும் சாலை, மண்சரிவு மிகுந்த ஆபத்தான இடங்கள் என்று அருமையான இயற்கைக் காட்சிகள் நம் கண்களையும்,மனதையும் கொள்ளை கொள்கிறது.
நான்கு பக்கமும் இமயமலைச் சிகரங்களான நீலகண்ட பர்வதம் (சிவபெருமான்), ஊர்வசி பர்வதம் மற்றும் நர-நாராயண பர்வதங்கள் வானுயர்ந்து நிற்கின்றன. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து நீலகண்ட பர்வதம், நர நாராயண பர்வதங்கள் மிக அழகாகக் காட்சி தந்தன. மஹாவிஷ்ணு, நர நாராயணர்களாக அவதரித்து, இந்த லோகக்ஷேமத்திற்காக நீண்ட நெடிய தவம் புரிந்தபோது, தவத்தைக் கண்டு அஞ்சிய தேவேந்திரன் அவர்களது தவத்தைக் கலைக்க அப்ஸரஸ்களை அனுப்புகிறான். உடனே மஹாவிஷ்ணுவானவர் அந்த அப்ஸரஸ்களின் அகம்பாவத்தை அடக்கவும், தேவேந்திரனுக்குப் பாடம் கற்பிக்கவும், தன் துடையிலிருந்து மிகவும் அழகான தேவதையைப் போன்ற ஊர்வசியை உருவாக்குகிறார்.
அவள் அழகைக் கண்டு வெட்கிப்போன அப்ஸரஸ்கள் தங்கள் அகம்பாவத்தைக் களைகின்றனர். தேவேந்திரன் மனம் திருந்துகிறான். இதனால் பத்ரிநாராயணனின் ஆலயம் 'ஊர்வசி’ பீடம் எனப்படுகிறது. ஆலயத்துக்குத் தெற்கில் ஊர்வசிக்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது.பிறகு நர நாராயணர்கள் ஊர்வசியைத் தேவேந்திரனின் அரண்மனைக்கே அனுப்புகிறார்கள். அவளும் தேவேந்திரனின் அரசவையில் ஆடலரசியாகப் பணிபுரிகிறாள்.
வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி, 'ஸ்ரீ பத்ரி நாதரின் பெருமையையும் பத்ரியைத் தரிசிப்பதனால் ஏற்படும் பயன்களையும் கூறுங்கள்' என்று கேட்டபோது, அவருக்குப் பதில் அளிக்கும் விதமாக, 'ஹிமாலயத்தில் இருக்கும் பத்ரிநாத்தைத் தரிசிப்பவன் தன்னுடைய பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெற்று முக்தி அடைகிறான். எவனொருவன் எப்போதும் அவரைப் பிரார்த்திக்கிறானோ,அவனுக்கு பத்ரியைத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கிறது' என்றுரைக்கிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக