சார்தாம் யாத்ரா..6



பத்ரிநாதனே சரணம்🙏


'பத்ரிநாதனைச் சரணடைந்தால், அவர் அவனுடைய பாவங்களைப் போக்கி மோக்ஷம் தருகிறார்.  ஐந்து தீர்த்தங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. தப்த குண்டம், நாரதகுண்டம், கூர்ம தாரா, பிரகலாததாரா, ரிஷிகங்கர் என்று ஐந்து ஆறுகள் உள்ளன. கூர்ம தாரா எனும் தீர்த்தம் அன்னதான பிரசாதம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. 


தப்த குண்டம் வெந்நீர் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தே  பத்ரிநாதரை வலம் வந்து தரிசிப்பது ஒரு அஸ்வமேத யாகம் செய்த பலனைத் தருவதாக பத்ரி நாதரே கூறியுள்ளார்' என்று வசிஷ்ட முனிவர் தெரிவிக்கிறார். 


தப்த குண்டம் வந்ததற்கும் ஒரு கதை உண்டு! அக்னி பகவான் ஒரு நாள் உணவில் நெய் அதிகமாக சேர்த்துக் கொண்டதால் ஏற்பட்ட அஜீரண பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று விஷ்ணு பகவானிடம் வேண்டினார். விஷ்ணு பகவான், அக்னியை தண்ணீராக மாறச் செய்து, அதில் பக்தர்கள் நீராடினால் அவர் பாவமெல்லாம் தீரும் என்றும், அதேபோல் அக்னி பகவானின் அஜீரண கோளாறும் நீங்கும் என்றும் வரமளித்தார். அதன் பின்பே அக்னி பகவான், நாராயணரின் பாதங்களிலிருந்து நீர் ஊற்றாக உருவானதே  தப்த குண்டம்  என்கிறது புராணம்.


கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகீரதனுக்காக  சிவபெருமானின் கபாலத்திலிருந்து உருவான கங்கை என்பதால் தப்த குண்டம் சூடாக இருப்பதாகவும்  கூறப் படுகிறது.இதில் மருத்துவ குணமுள்ளதால்  குளிப்பவர்களின்  நோய்கள் குணமாவதாகக்  கூறப்படுகிறது.


முற்காலத்தில் பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் இருந்ததால் குழம்பிய பார்வதி சிவனிடம் வேண்ட, அவரும் ஒரு தலையை கொய்துவிட்டார். அந்தத் தலை அவர் கையில் ஒட்டிக் கொண்டு விட்டதாம்! 


அச்சமயம் பத்ரிநாத் வந்த சிவபெருமான் அங்கிருந்த

மஹாலக்ஷ்மியிடம் பிச்சை கேட்க, மகாலட்சுமி பிச்சை அளித்ததும் சிவபெருமானின் கையில் இருந்த பிரம்மனின் தலை கீழே விழுந்தது. அந்த இடம்தான் இன்று  பிரம்ம கபாலம் என்று அழைக்கப் படுகிறது.  இந்த இடத்தில் பித்ருக்களுக்கு பிண்டம் வைப்பது சிறப்பாக கருதப்படுகிறது.  ஆண்கள் மட்டுமே அங்கு சென்று தர்ப்பணம் செய்து வந்தனர். 


விஷ்ணுமனஸ் என்ற அந்தணனின் மகன் விஷ்ஹரதி என்பவன்வேத சாஸ்திரத்தில் ஈடுபாடின்றி பத்ரி வந்தான். அங்கு பெருமாள் அருளால் நாரதராகி ஞானம், யோகித்வம்,இசை வல்லமை  பெற்று சிறப்படைந்தார். அதனால் இது நாரத க்ஷேத்திரம் எனப்படுகிறது. ஜனமேஜயன் பெண்ணாசையால் அழிந்தபோது வியாசர் அறிவுரையால் திருந்திய தலம்.


சம்ஸ்க்ருதத்தில்  ‘பத்ரி’ என்றால் ‘இலந்தை’ என்று பொருள். ஆகவே இத்தலம்  இலந்தைவனமாகத் திகழ்கிறது. இங்கு மஹாவிஷ்ணு தவக்கோலத்தில் இருக்கும்போது, அவரை சூரியனின் வெப்பத்திலிருந்து காப்பதற்காக அவர் அருகேமஹாலக்ஷ்மி அரவிந்தவல்லித் தாயார் என்ற பெயரில் தானே இலந்தை மரமாக நின்றிருக்கிறாளாம். சாதாரண மானிடர்களான நமக்கே அருள் செய்யும் தேவி தன் மணாளனுக்கு மரமாக நிற்பதில் வியப்பில்லையே! 


மஹாவிஷ்ணு தவத்தில் இருந்தபோது அவரை தரிசிக்க வந்த பிரம்மா முதலிய முனிவர்களிடம் 'தாம் அங்குள்ள நாரத குண்டத்தில் மறைந்திருப்பேன் என்றும் வெகுகாலத்திற்குப் பின் ஒரு ஆன்மீக மஹானால் கண்டெடுக்கப்படுவேன். கலியுகத்தில் மக்களை தீய வழியிலிருந்து நல்வழிப் படுத்த என்னை கஷ்டப்பட்டு வந்து தரிசித்தால் அவர்களுக்கு முக்தி தருவேன்' என்றும் கூறி மறைந்து விட்டார்.


பின்னர் பிரம்மாவால் வடிக்கப்பட்ட சிலை புத்த மதம் தழைத்தபோது அவர்களால் சிதைக்கப்பட்டு நாரத குண்டத்தில் வீசப்பட்டதாம். அந்த விக்கிரகம் ஒன்பதாம் நூற்றாண்டில் ஆதி சங்கரரால் கண்டுபிடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாரத குண்டத்திலிருந்துதான் ஆதி சங்கரருக்கு சாளக்ராமம் கிடைக்கிறது.  அதை தப்த குண்டத்திற்கும் கருட சிலைக்கும் நடுவே பிரதிஷ்டை செய்தார். குஷ்ட நோயால் அவதிப்பட்ட கர்வால் மகாராஜா, வரதராஜ ஆச்சாரியார் என்ற தன் குருவின் ஆலோசனைப்படி, 

இந்த மூர்த்தியைத் தற்போது உள்ள மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பியுள்ளார். அதன் பயனாக அவருடைய நோயும் நீங்கப்பெற்றுள்ளது. 


பத்ரிநாத் வைகுண்டத்தின் நுழைவாயில் என்பதால் தேவர்கள் அவரை வணங்க வேண்டியே ஆறு மாதங்கள் பனிப்பொழிவதாகவும் கூறப்படுகிறது. இத்தலத்திற்கு பத்ரி விஷால் என்று பெயர்.  பத்ரியைத் தரிசிக்காமல் முக்தி அடைய முடியாது என்பது நம்பிக்கை. ரிக் வேதத்தின் சில வாசகங்கள் இங்கு எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.


பத்ரிநாதர் ‘பத்ரீசர்’ என்றும் குறிப்பிடப்படுகிறார். இவர் வைணவர்களுக்கு வைகுண்டநாதராகவும், சிவனடியார்களுக்கு பஞ்சமுகி சிவனாகவும், அம்மன் உபாசகர்களுக்கு காளியாகவும் காட்சி தருகிறார் என்பது நம்பிக்கை. எனவே, இது சைவ வைணவத்தின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் தலமாகவும் விளங்குகிறது. மேலும் பௌத்தர்களுக்கு சாக்கிய முனியாகவும், ஜைனர்களுக்கு தீர்த்தங்கரராகவும் காட்சி தருகிறார் என்றும் நம்பப்படுகிறது.


ஆலயம் கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் இரண்டடி உயரத்தில் பத்ரிநாதர் த்யான நிலையில் காட்சி தருகிறார். இவரைத் தரிசிக்காமல் முக்தி அடைய முடியாது என்பது நம்பிக்கை. கருவறைக்கு அருகே தர்ம சிலா என்கிற உண்டியலும் ஹோம குண்டமும் இருக்கின்றன.    வலப்பக்கம் நின்றநிலையில் நரநாராயணர்களும் இடப்புறம் குபேரனும் விநாயகரும் காட்சி தர, பெருமாள் முன்புறம் நாரதர் அமர்ந்திருக்க, மேலே சந்திர சூரியர்கள் உள்ளனர்.


கருமை நிற சாளக்ராமத்தில் உள்ள பத்ரி நாதருக்கு பாலாபிஷேகம், தேனாபிஷேகம் நடைபெறுகிறது.’ மாலை சிங்கார தரிசனத்தின் போது, விஷ்ணு சஹஸ்ரநாமமும், கீத கோவிந்தமும் பாடப்படுகின்றன. ஆதிசங்கரரால் நியமிக்கப்பட்ட நம்பூதிரிகளே இங்கு பூஜை செய்கின்றனர். 


ஆலயத்தினுள் கண்டா கர்ணனுக்கும், மஹாலக்ஷ்மிக்கும் தனி சன்னிதிகள் இருக்கின்றன. குபேரன், நாரதர், உத்தவர், நர நாராயணர்களுக்கு சன்னிதி உண்டு. ஆதி சங்கரர், ராமானுஜர், வேதாந்த தேசிகர் ஆகியோரின் விக்ரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஆலயத்தின் உள்ளே ஆதிசங்கரர் மடமும், அவர் தவம் செய்த குகையும், கற்பக விருட்ச மரமும் உள்ளது.


கோவில் வாயிலில் மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிக்கும் விதமாகப் பத்து தூண்கள் அமைந்துள்ளன. கருடன் அழகாக வீற்றிருக்கிறார். அருகே விநாயகர் விக்ரகமும், ஹனுமான் விக்ரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன.


மூலஸ்தானமான கர்ப்பக்கிருகத்தின் விமானம் பொன்னால் வேயப்பட்டிருக்கிறது.  சபா மண்டபத்தில் இருந்துதான் பக்தர்கள் பத்ரிநாதரைத் தரிசனம் செய்ய முடியும். 


காலை 5 மணிக்கு கோயில் திறக்கப்படுகிறது. தரிசன நேரம் காலை 6.30 முதல் பகல் 1 மணி வரையிலும், பிறகு மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும். வரிசையாக பூஜைகள். எல்லாவற்றிற்கும் கட்டணங்கள் உண்டு. கட்டண தரிசனங்களுக்கு மட்டுமே கருவறையை அடுத்த  மண்டபத்துக்குள் அனுமதி. மற்றவர்கள் வரிசையில் வெளிமண்டபத்திலிருந்தே தரிசிக்க வேண்டும். 


நாங்கள் மாலை விஷ்ணு சகஸ்ரநாம பூஜையில் கலந்து கொண்டோம். இருபது நிமிடங்கள் இறைவனை இதயபூர்வமாக தரிசித்தோம். அற்புத தரிசனம்.காமிராக்களை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லாததால் புகைப்படம் எடுக்க முடியவில்லை.


வராஹ ஷிலா, நாரத ஷிலா, நரசிங்க ஷிலா, கருட ஷிலா, மற்றும் மார்கண்டேய ஷிலா என்று பஞ்ச ஷிலாக்கள் இங்கே இருக்கின்றன. இவை தப்த குண்டத்திற்கு மேலே உள்ளன. அதைச் சுற்றிலும் பிரஹலாத தாரா, கூர்ம தாரா, ஊர்வசி தாரா, பிருகு தாரா, இந்திர தாரா ஆகிய ஐந்து அருவிகள் (பஞ்ச தாரா)இருக்கின்றன. 


மஹாபாரதம், ஸ்கந்த புராணம், பாகவத புராணம், பத்மபுராணம் ஆகியவை பத்ரிநாத் தலத்தைப் பற்றிக் கூறுகின்றன.

பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் பத்ரி நாதரின் பெருமைகளைத் திவ்யப் பிரபந்தங்களாகப் பாடியுள்ளனர்.  


நவம்பரில் ஆலயம் மூடப்பட்டபின் ஆறு மாதங்கள் உற்சவ விக்ரகங்கள் கீழே ஜோஷிமடம் எடுத்துச் செல்லப்பட்டு பூஜைகள் தொடரும். அந்த ஆறு மாதங்களும் தேவர்கள் இவரை வழிபடுவதாகக் கூறுகின்றனர். ஆலயம் மூடும்போது ஏற்றி வைக்கப்படும் விளக்கு ஆறு மாதங்கள் கழித்து திறக்கும்வரை எரிந்து கொண்டிருப்பது அதிசயமாகக் கூறப்படுகிறது. 


பயணம் மனதில் பயத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும், பத்ரிநாதனின் தரிசனம் நம் பாவங்களோடு அனைத்து துன்பங்களையும் தூசாக்கி நம் மனதைக் கொள்ளை கொள்கிறது.

அடுத்து கேதார்நாத் தரிசனம்🙏


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சார்தாம் யாத்ரா..14

சார்தாம் யாத்ரா..9

சார்தாம் யாத்ரா..13