சார்தாம் யாத்ரா..7



முக்தித் தலம் கேதார்நாத்

நாங்கள் பத்ரிநாத், மனா கிராமம்,பஞ்சபத்ரி, ஜோஷிமட், வசிஷ்டர் ஆசிரமம் (இவை பற்றிய விபரம் பின்னால் எழுதுகிறேன்.) ஆகியவற்றை தரிசனம் முடித்தபின் குப்தகாசி சென்று தங்கினோம். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கேதார்நாத் செல்ல வேண்டும். 


இன்னொரு வழி சூரிய சந்திரர்கள் வழிபட்ட கௌரிகுண்ட் வழியாக சென்றால் குதிரை, டோலி அல்லது நடைப் பயணமாக 14கி.மீ. மேலே ஏறிச் செல்ல வேண்டும். இங்கு ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது. இறைவனின் பாகம் வேண்டி அம்பிகை தவம் செய்த இடம் இது.


பிருகு முனிவர் கைலாயம் சென்றபோது சிவனை மட்டும் வழிபட எண்ணி இருவர் இடையே நுழைந்து வந்தபோது, தன்னை அவர் அவமதித்ததாக எண்ணிய அன்னை சிவபெருமானின் உடலில் பாதி பாகம் வேண்டி இங்குள்ள  கௌரிகுண்ட் என்ற இடத்தில் தவமிருந்தாள். ஈசனும் அவளைத் தன்னில் பாதியாக்கிக் கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். அதன் அருகிலுள்ள திரியுகி நாராயண் என்ற இடத்தில் சிவபார்வதி திருமணம் நடந்த ஹோமகுண்டத்தில் மூன்று யுகங்களாக இன்னமும் அக்னி அணையாமல் இருக்கிறதாம். நாங்கள் ஹெலிகாப்டரில் சென்றதால் அங்கு செல்லவில்லை.


குப்தகாசி ஹெலிபேடில் ஹெலி

காப்டர்கள் வருவதும் போவதுமாக பறந்துகொண்டே இருந்தன.அங்கு எடை பார்த்து ஹெலிகாப்டர் தாங்கக்கூடிய அளவுக்கு ஏற்றவாறு ஐந்து, ஆறு என்று சிறு குழுவினராகப் பிரித்து ஹெலிகாப்டர் பயணத்தை ஏற்பாடு செய்கின்றனர். ஹெலிகாப்டரில் செல்ல 4000 ரூபாய். 80 கிலோவுக்குமேல் இருந்தால் 1 கிலோவுக்கு 150 ரூபாய் வீதம் அதிகம் கொடுக்க வேண்டும். ஹெலிகாப்ட்டர் வந்ததும் அதன் இயக்கத்தை நிறுத்தாமல்  விரைவாகச் சென்று ஏற வேண்டும் என்பதால் அந்த ஊழியர்கள் நம்மை அழைத்து...இல்லை இழுத்துச் சென்று ஏற்றி விடுகிறார்கள்! உள்ளே அமர்ந்து உடலை ஆட்டக்கூடாது, டாடா சொல்லக் கூடாது,புகைப்படம் எடுக்கக் கூடாது என்றெல்லாம் கண்டிஷன்கள்! பைலட் அருகில் இருவரும் பின்னால் நான்கு பேரும் அமர வேண்டும்.


விமானத்தில் பறந்த நமக்கு ஹெலிகாப்டரில் செல்வது புதிய அனுபவம்! செங்குத்தான இரு மலைகளுக்கிடையே செல்லும்போது  'பாறையில் மோதிவிடுமோ' என்று நடுக்கம்! கீழே அதலபாதாளத்தைப் பார்க்க கதி கலங்குகிறது! மலைகளுக்கிடையே மெல்லிய வெண்கோடாக ஓடும் மந்தாகினியின் அழகு மயங்க வைக்கிறது! மனதிற்குள் நமசிவாய மந்திரம் ஓட, கண் எதிரே இமயமலைச் சாரல்கள் மஹாமேருவாக மஹேஸ்வர ரூபமாகவும், தேவியின் ஸ்ரீ சக்ரமேரு போலவும்  தோன்றியது.இது ஒரு புதிய மனதை மயக்கிய அனுபவமாக இருந்தது! புகைப்படங்கள் எடுக்க முடியாவிடினும் கண்களே காமிராவாகப் பார்த்த நினைவுகள் இன்றும் தெரிகிறது!


அதிகமில்லை..வெறும் 7 நிமிடங்களில் கேதார்நாத்தில் இறங்கிவிட்டோம்! அங்கிருந்து ஒன்றரை கி.மீ. நடந்தால் ஆலயம். உயர மில்லாத படிகள் ஏற சுலபமாக உள்ளது. 2013 வெள்ளத்திற்குப்   பின் எல்லாம் புதிதாக கட்டியிருக்கிறார்கள். இரவில் தங்கவும் அறை வசதிகள் உள்ளன. நாங்கள் தரிசனம் முடித்தவுடன் திரும்பி விட்டோம்.வழியில் உட்கார பெஞ்சுகள், கழிவறைகள், கடைகள் உள்ளன. நடக்க முடியாதவர்களுக்கு கூடைடோலி எனப்படும் ஒருவரே முதுகில் தூக்கிச் செல்லும் டோலி உண்டு.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிறந்தவீடு (சிறுகதை)(27.2.'21)

Garden_to_table..1

குருவாயூருக்கு வாருங்கள்..9