உனக்காகக் காத்திருக்கிறேன்..

 






#wtwகதைஎழுது #wtwstories2021
#May2

உனக்காகக் காத்திருக்கிறேன்..

ஒவ்வொரு முறை மீனு சென்னையிலிருந்து தஞ்சைக்கு  பிறந்தவீடு செல்லும் போதும் கும்பகோணம் ஸ்டேஷனில் ரயில் நிற்கும்போது அவள் கண்கள் கலங்காமல் இருக்காது. இதை ஒருமுறை சந்த்ரு கவனித்து விட்டு கேட்டபோது கண்ணில் கரி விழுந்ததாக சொல்லி சமாளித்தாள். இன்றும் பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டாள்.

அவள் அம்மாவழி தாத்தா வீடு குடந்தை. தாத்தாவுக்கு இரண்டு பெண்கள். அதன்பின் பல வருடம் கழித்து ஒரே பிள்ளை. இவள் அம்மாவுக்கும் அவனுக்கும் 13வயது வித்யாசம். அவள் அம்மா கமலா திருமணத்
தின்போது தம்பி ரகுவிற்கு ஐந்து வயது. அவனுக்கு அம்மாவை விட அக்காவிடம் பாசம் அதிகம். அவளுக்கு திருமணமாகி சென்றபோது அவளை நினைத்தே அழுவான் என்பார் அவள் பாட்டி.

அடுத்த வருடமே மீனா பிறந்து விட ரகுவுக்குதான் மீனா என்று அன்றே முடிவு செய்து விட்டார்கள். மீனாவின் சித்தி விமலாவுக்கு புக்ககம் மும்பை. அவளுக்கு இரண்டு பிள்ளைகள். அவளால் அடிக்கடி அம்மா வீடு வரமுடியாது. கமலாவுக்கு தஞ்சை என்பதால் நினைத்தால் அம்மா வீட்டுக்கு வந்து விடுவாள்.

ரகுவுக்கு மீனாதான் என்று முடிவானதால் அவர்களுக்கு வயதானபின்பும் இருவரும் மிக சுவாதீனமாகப் பேசிப் பழகுவார்கள். யாரும் அவர்களைத் தடுக்கவில்லை.
ரகு தஞ்சையில் இன்ஜினியரிங் படித்தபோது  அக்கா வீட்டிலேயே தங்கியதால்  மீனாவிடம் காதல் இயல்பாக ஏற்பட்டது.

இருவரும் அருகிலுள்ள இடங்களுக்கு தனியாக பைக்கில் செல்வார்கள். தஞ்சை அருகில் கருந்தட்டாங்குடியில் மீனாவின் சித்தப்பா வீடு இருந்தது. அங்கு செல்லும்போது வழியில் ஒரு வாய்க்கால் மேல் போடப்பட்டிருந்த கரடுமுரடான பாலம் இருவருக்கும் பிடித்த இடம்.

அங்கு அமர்ந்து தம் எதிர்கால வாழ்க்கை பற்றி மணிக் கணக்காக பேசுவார்கள்.
"மாமா..என்னை கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பயோன?"

"அசடே!என்ன சந்தேகம். இதோ இந்த கரடுமுரடு பாலம் சாட்சியா சொல்றேண்டி! நீதான் என் பெண்டாட்டி!"
என்று சொல்லி இறுக்கி அணைத்து கொடுத்த முதல் முத்தம் இன்னும் இனிக்கிறது!

தஞ்சையைச் சுற்றியுள்ள பல இடங்களுக்கும் இருவரும் இணைந்து சென்றதுண்டு. கல்லணைக்கு இருவரும் சென்றபோது அங்குள்ள அழகிய பசுமைச் சோலையில் அமர்ந்து இருவருமாக எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை பத்திரமாக வைத்திருக்
கிறாள்.தாம் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்பது நிச்சயம் என்றாலும் இருவரும் வரம்பு மீறியதில்லை.

ரகு B.E. முடித்ததும் MS படிக்க அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்தது. மீனுவுக்கு இஷ்டமே இல்லை. ரகுவிடம் போக வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தாள். கிடைத்த வாய்ப்பை விட அவனுக்கு மனமில்லை.

"ரகு..என்னை மறந்துட மாட்டியே? நான் உனக்காகக் காத்திருப்பேன்".

"அதெப்படி முடியும் மீனு. எனக்கு அங்கேயே வேலை கிடைத்ததும் உன்னைக் கட்டி இழுத்துண்டு போயிட மாட்டேனா? இரண்டு வருஷம் பொறுத்துக்கோடி கண்ணு!"

வருடம் ஓடியது. போன புதிதில் அவன் அலுவலக புகைப்படம் மற்றும் அந்த ஊர் ஸ்பெஷல்களின்
வீடியோக்களும் அனுப்பியவன் பிறகு ஃபோனில் பேசுவதும் குறைந்து விட்டது. இரண்டு வருடம் முடித்து வேலையும் கிடைத்தது. நான்கு வருடம் கழித்து குடந்தை வந்தவன் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான். தான் அங்கு சில்வியா என்ற பெண்ணை விரும்புவதாயும், திருமணம் செய்து கொள்ளப் போவதாயும் சொல்ல குடும்பமே அதிர்ச்சியில் வாயடைத்துப் போயிற்று.

மீனாவின் தாத்தா பாட்டி எத்தனையோ அழுது எடுத்துச் சொல்லியும் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று.

"ஒரே பிள்ளை என்று செல்லம் கொடுத்து விட்டோம். மீனுவிடம் பாசமாக இருந்ததால் அவளைத் திருமணம் செய்து கொள்வான் என்று நம்பினோமே" என்று எல்லோரும் வருத்தப் பட்டார்கள்.

மீனா அவனை தனியாக சந்தித்து அழுதபோது," அழாதே. எல்லாம் ஓவர். நான் உன்னிடம் எதுவும் தவறாக நடந்தேனா?" என்று கேட்டு முற்றுப்புள்ளி வைத்து விட்டான். 'நல்லவேளை நான் இவனிடம் என்னை இழக்கவில்லை' என்று நிம்மதியானாள் மீனு!

அதன்பின் மீனுவின் அப்பா குடந்தைக்கே போகக் கூடாது என்று சொல்லி, வெளிநாடு சென்று படித்து சென்னையில் ஒரு பெரிய கம்பெனியில் பதவி வகிக்கும் சந்த்ருவிற்கு மீனுவைத் திருமணம் செய்து இன்று இரண்டு குழந்தைக
ளுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

ஆனால் ரயில் பயணத்தின்போது குடந்தை ஸ்டேஷனைப் பார்க்கும்போது அந்த நினைவுகள் வருவதை மீனாவால் தவிர்க்க முடிவ
தில்லை. என்னவானாலும் முதல் காதலாயிற்றே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிறந்தவீடு (சிறுகதை)(27.2.'21)

Garden_to_table..1

குருவாயூருக்கு வாருங்கள்..9