சார்தாம் யாத்ரா..2
நாங்கள் முதலில் ஹரித்வார் சென்று தங்கி அங்கிருந்து பத்ரிநாத் சென்றுவிட்டோம். பத்ரியில் நாங்கள் தங்கும் ஹோட்டல் இரண்டு நாளில் மூடிவிடுவார்கள் என்றதால் அச்சமயம் ரிஷிகேஷ் தரிசிக்க முடியவில்லை. பிறகு எல்லா இடமும் தரிசித்து திரும்ப ஹரித்வார் வந்தபோது ரிஷிகேஷ் தரிசித்தோம்.
உத்தர்கண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ரிஷிகேஷ், ஹரித்வாரிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. சார்தாம் யாத்திரையின் துவக்கம் இங்கிருந்துதான். அடக்கமாக, அமைதியாக ஓடி வரும் கங்கைக்கரையில் அமைந்த அழகான நகரம்.
நகரெங்கும் யோகா மையங்கள். சிவானந்த சுவாமி ஆசிரமம் மிக அருமையாக உள்ளது. அனைத்து நாடுகளிலிருந்து ஆயிரக்
கணக்கான சுற்றுலாப்பயணிகள்
வந்து இங்கே யோகா கற்றுச் செல்லுகின்றனர். 'உலகின் யோகா தலைநகரம்'
என்று போற்றப்படுகின்றது.கீதா மந்திர்
ரிஷிகேஷ் என்கிற மஹாவிஷ்ணுவின் பெயருக்கு இந்திரியங்களுக்கு அதிபர் என்று பெயர். ரைப்ய மஹரிஷி தன் புலன்களை அடக்கி இந்தத்தலத்தில் கடுந்தவம் புரிய, அவருக்கு ரிஷிகேஷ் நாராயணராக மஹா விஷ்ணு காட்சி தந்ததால் இத்தலம் ரிஷிகேஷ் என்று பெயர் பெற்றது.ஆதி சங்கரரும் ஸ்ரீ ராமானுஜரும் இங்கு வந்து தவம் புரிந்துள்ளார்கள்.
ராவணனைக் கொன்றதற்காக ராமபிரான் இங்கே பிராயச்சித்த சடங்குகளைச் செய்யும்போது ஆர்ப்பரித்து ஓடும் கங்கை தொந்தரவாக இருந்ததால், ஒரு அம்பை எய்து அதை அமைதி
யாக்குகிறான் லக்ஷ்மணன். இன்றும் கங்கை அமைதி
யாகத்தான் அங்கே ஓடிக்கொண்டி
ருக்கிறாள். மேலும் கங்கையைக் கடந்து செல்ல லக்ஷ்மணன் ஒரு தொங்குப் பாலத்தைக் கட்டியதாகப் புராணம் கூறுகிறது.
லக்ஷ்மண் ஜூலா என்ற இந்த கயிற்றுப் பாலம் 1889ஆம் ஆண்டில் அதிர்வுதாங்கும் பாலமாக இரும்புக் கம்பிகள் கொண்டு மாற்றப்பட்டது. 1924ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிறகு, இது வலுவான தற்போதைய பாலமாக மாற்றப்பட்டது.
அருகிலேயே 'ராம் ஜூலா' என்கிற பெயரில் ஒரு பாலத்தையும் அரசு கட்டியுள்ளது. இதுசிவானந்த பாலம் எனப்படுகிறது. இதற்கு எந்தப் புராண சம்பந்தமும் இல்லை. இங்கு ராமர், லக்ஷ்மணர்
ஆகியோருக்குக் கோவில்கள் இருக்கின்றன.
இந்த நகரம் இந்தியாவின் சாகசத் தலைநகரமாக உருவாகியுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து வரும் பயணிகள் புனித கங்கையில் படகுப் பயணத்தோடு bunky jumping, river rafting போன்ற விளையாட்டுக்களையும்
அனுபவிக்கின்றனர்.
மிகவும் புராதனமான பரத் மந்திர் கோவில் தான் ரிஷிகேஷ் நகரம் உருவாவதற்குக் காரணம். ரைப்ய மஹரிஷி புலன்களை அடக்கித் தவமிருந்தபோது மஹாவிஷ்ணு நான்கு கரங்களுடன் பரத் மகராஜ் என்ற பெயரில் காட்சி தந்த ஆலயம். 13ம் நூற்றாண்டில் வசந்த பஞ்சமி அன்று ஆதிசங்கரர் உருவாக்கியது.
கோவிலுக்குள் நுழைந்தவுடன் மிகப்பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. இதனுடன் அரச மரமும் அதே வகையான வேறொரு மரமுமாக மூன்று மரங்கள் பின்னிப்பிணைந்து ஒரே மரமாகக் காட்சி தருகின்றன. இவை மூன்றையும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மும்மூர்த்திகளாக மக்கள் வழிபடுகின்றனர்.
பரத் மந்திரை அடுத்த கங்கைக் கரையில் அமைந்துள்ள திரிவேணி கட்டத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி இணைந்து திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கே தினமும் மாலையில் பிரசித்தி பெற்ற கங்கா ஆரத்தி நடைபெறுகிறது.
ரிஷிகேஷிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் நீலகண்டர் கோவில் இருக்கிறது. போகும் வழியில் வில்வ மரங்கள் அடர்ந்து இருக்கின்றன.அந்தக் கோவிலில் உள்ள சிவலிங்கம் மரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.
அம்மரத்தில் குடியிருக்கும் தேனீக்களின் ரீங்காரத்தை சாமகானமாகக் கேட்டு மகிழும் சிவபெருமான் காட்சி தருகிறார். இங்கே பார்வதிக்கும்அஞ்சனையின் கைகளில் காட்சி தரும் பால ஹனுமானுக்கும் தனி சன்னிதிகள் உள்ளன.
ருத்திராட்சங்களும், ஸ்படிகங்களும் இங்கு விற்கப்படுகின்றன.ஸ்படிக மாலை, ருத்ராட்ச மாலைகள், ஸ்படிக லிங்கம் போன்றவை அரசு அங்கீகாரம் பெற்ற கடைகளில் கியாரண்டியுடன் கிடைக்கின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக