சார்தாம் யாத்ரா..14

 


ஹனுமான்சட்டி

ஜோஷிமட் பத்ரிநாத் பாதையிலுள்ள ஹனுமான் சட்டி ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம் புராண பெருமை பெற்றது. பீமன் திரௌபதிக்காக சௌகந்திக புஷ்பத்தை தேடிச் சென்றான். வழியில் படுத்திருந்த ஹனுமனை வழிவிடும்ழடி பீமன் சொல்ல, ஹனுமனும் தன் வாலை நகர்த்திவிட்டு போகச் சொன்னார். 


தன் பலத்தைப் பற்றி அகந்தை கொண்டிருந்த பீமன் அலட்சியமாக வாலை நகர்த்தினான். அது நகரக்கூட இல்லை.தன் கையால் பலம் கொண்டவரை நகர்த்தியும் முடியவில்லை. தன் கர்வம் குறைந்து பீமன் மன்னிப்பு கேட்க ஹனுமன் தான் யாரென்று கூறி சகோதரனை அணைத்து ஆசி வழங்கினார். அவ்விடமே இவ்வாலயம் உள்ள இடம். இதே பெயரில் உள்ள இன்னொரு ஊர் யமுனோத்ரி செல்லும் வழியில் உள்ளது.


கோவில் சிறிதானாலும் மிக அழகாக இருக்கிறது. இங்கு ஹனுமான் சாலிஸா சொல்லி எதை வேண்டினாலும் நிறைவேறுமாம். 


பைலட் பாபா ஆஸ்ரமம்


உத்தரகாசி செல்லும் வழியில் 'பைலட்பாபா ஆஸ்ரம்' பார்க்க வேண்டிய ஆலயம். அத்தனை இறை உருவங்களும் பிரம்மாண்ட உயரத்தில்! அவற்றின் அழகு கண்களுக்கு விருந்து!


பிரகடேஸ்வர் ஆலயம்


பார்கோட்டிலிருந்து உத்தரகாசி  செல்லும் வழியில் அமைந்துள்ள இவ்வாலயத்திற்கு 150 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மேலே ஒரு குகையினுள் சுண்ணாம்புப் பாறையால் தானே சுயம்புவாக உருவான  சிவலிங்கம் காட்சி தருகிறது. குகையினுள் குளிர்நீர் வந்து கொண்டிருக்கிறது.


பிரகாஷேஸ்வர் ஆலயம்


திரும்ப ஹரித்வார் வரும் வழியில் டேராடூனில் உள்ளது இவ்வாலயம்.  மிக அழகிய ஆலயம். சுத்தமாக இருக்கிறது. இந்தியாவிலேயே உண்டியல் இல்லாத, நன்கொடைகள் பெறாத ஒரே ஆலயம் என்ற சிறப்பைப் பெற்றது! ஆலயத்தில் சிறிய அளவுள்ள ஸ்படிக லிங்கத்திலிருந்து மிகப் பெரிய அளவுள்ள லிங்கம் வரை உள்ளது. 


இமயமலையிலிருந்து விழும் ஐஸ்கட்டிகள் இறுகி ஸ்படிகங்களாக மாறுகிறதாம். அதைப் பற்றி நன்கு அறிந்த சாதுக்கள் அவற்றை லிங்கமாக உருவாக்குவராம். 


அங்குள்ள ஸ்படிக லிங்கத்திற்கு நாமே அபிஷேகம் செய்து பூக்கள் போட்டு வேண்டிக் கொண்டால் நினைத்தது நிறைவேறு

மாம். சுத்த ஸ்படிகத்தாலான ஸ்வாமிவிக்ரகம், லிங்கம், மாலைகள் அங்கு விற்கப் படுகின்றன.


சார்தாம்களையும், அதைச் சுற்றியுள்ள சில சிறப்பான கோயில்களையும் தரிசித்து விட்டோம். உங்களுடன் பகிர்ந்ததால் இன்னொருமுறை எல்லா இடங்களையும் மனக்கண்ணால் தரிசனம் செய்தேன். என் ஆயுளில் நான் பெற்ற பெரும் புண்ணியம் இந்த தரிசனம்! 


யாத்திரை செல்வது பற்றி...

*யாத்திரை செல்ல ஏற்ற மாதங்களாக செப்டம்பர் அக்டோபரே சிறந்தது. அட்சய திருதியை அன்று ஆலயங்கள் திறந்ததும் தரிசனங்கள் ஆரம்பித்து விடுமாம். மே ஜூனில் மலைகளிலிருக்கும் பனி உருகி வருவதால் பாதைகள் ஈரமாகி நடப்பது கடினம் என்கிறார்கள். ஜூலை ஆகஸ்ட் நல்ல மழை பெய்வதால் ஹெலிகாப்டர்கள் செல்வது கடினம்.

நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.


*நிறைய டிராவல்கள் இந்த யாத்திரைகளை அழைத்து செல்கிறார்கள். அவர்களே தங்குமிடம் ஏற்பாடு செய்து உணவும் அவ்வப்போது சூடாக சமைத்துப் போடுகிறார்கள்.

அந்தக் குளிருக்கு இதமாக உள்ளது! சமைக்கும் வசதியுள்ள ஹோட்டல்கள், தர்மசாலைகளில் நமக்கும் தங்க ஏற்பாடு செய்கிறார்கள்.


*கேதார்நாத் பத்ரிநாத் யமுனோத்ரியில் அதிகபட்ச குளிர் இருப்பதால் தெர்மல், ஜெர்கின்கள்,கையுறைகள், கம்பளி ஸாக்ஸ்கள், தலை குல்லாக்கள்,  ஷீக்கள் அவசியம் தேவை.


*எல்லா இடங்களுக்கும் நிறைய உயரமான படிகள் ஏறி இறங்க வேண்டியிருப்பதால் சுவாச பிரச்னை, முழங்கால்வலி இருப்பவர்களுக்கு கடினமே. அங்கு விற்கும் மூங்கில் கழிகளை வாங்கிக் கொண்டால் சற்று வேகமாக நடக்க உதவும்.


*எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் அந்த இறைவனை தரிசித்ததும் 'நாம் செய்த புண்ணியம்' என்று மனம் பக்தியிலும் சந்தோஷத்திலும் மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் பெருகுகிறது.


'மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்ற பெருமை நமக்குள்ளும் ஏற்படுகிறது. 'தேவபூமி' என்பதற்கேற்ப அந்த இயற்கை அழகும், பனி மூடிய மலைகளும், பெருகி ஓடும் நதிகளும், ஆன்மீக எண்ணங்களும்,மாசில்லாத சுற்றுச் சூழலும் அவ்விடத்திலேயே இருந்துவிட மாட்டோமா என்ற ஆசையைத் தூண்டுகிறது!


இதயம் கவர்ந்த இமயமே!

இயற்கை அழகில் 

இமைக்க மறந்தேன்!

இன்பம் அடைந்தேன்!

உன்னில் நடந்தேன்!

உன்னை தீண்டினேன்!

உன்னை ரசித்தேன்!

உன்னில் மயங்கினேன்!

உன்னில் கலந்தேன்!

உன் உயரம் கண்டு வியந்தேன்!


என் துயரம் மறந்து மகிழ்ந்தேன்!

என்னையே மறந்தேன்!

எத்தனை உயரம்..

எத்துணை ஆறுகள்..

எத்தனைஅழகாய் இறங்கும் நீர்வீழ்ச்சிகள்..

எண்ணிலடங்கா ஆலயங்கள்..


ஈராறு நாட்கள் இணைந்திருந்தேன்!

இறைதரிசனங்களில்

இவ்வுலகம் மறந்தேன்!

இனி என்று காண்பேன் 

இப்பிறவியில் உன்னை!


இதுவரை என் கட்டுரையைப் படித்து ரசித்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி 🙏🏼


ராதாபாலு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சார்தாம் யாத்ரா..9

சார்தாம் யாத்ரா..13