புத்ரதா ஏகாதசி..(18.7.2020)

 



மக்கட்செல்வம் அருளும் புத்ரதா ஏகாதசி..(18.7.2020)

மனிதர் எவருமே பாவிகளாகப் பிறப்பதில்லை. நாம் முற்பிறவி
யில் செய்த வினைப்பயனா
லேயே மறுபிறவி ஏற்படுகிறது.

எத்தனை செல்வம் இருந்தாலும் செல்வங்களில் உயரிய மக்கட் செல்வம் இல்லை என்றால் மற்ற செல்வங்கள் அனைத்தும் வீண் என்கின்றன சாஸ்திரங்கள். அந்த மக்கட் செல்வம் வேண்டுவோர் வழிபட வேண்டிய விரதமாகக் குறிப்பிடப்படுகிறது நாளைய பவித்ரோபனா அல்லது புத்ரதா ஏகாதசி.

ஸ்ரவண மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியே புத்ரதா ஏகாதசி. இந்த ஏகாதசியின் சிறப்புகளை யுதிஷ்டிரன் கேட்க அதற்கு பகவான் கிருஷ்ணர் பதில் கூறுகிறார்.

துவாபர யுகத்தில் மஹிஷ்மதிபுரி என்னும் ராஜ்ஜியத்தை ஆண்டுவந்த மன்னன் மஹிஜித்திற்கு அனைத்து செல்வங்களும் நிறைந்திருந்தும் தனக்குப் பின் தன் ராஜ்ஜியத்தை ஆள ஒரு வாரிசில்லையே என்று . மஹிஜித் கவலையுற்றான்.

'தான் தர்மம் தவறாது இருந்தும் தனக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டது' என்று தன் நாட்டிலிருந்த அறிஞர்களை எல்லாம் அழைத்துக் கேட்டபோது அவர்கள் முனிவர் லோசமரைச் சரணடைந்து கேட்டால் வழி பிறக்கும் என்று கூற,  அவரை சந்தித்து விடை அறிந்துவரும்படி கூறினான்.

லோசமர், பிரம்மனுக்கு நிகரான மகான். அமைச்சர்கள் அவரைத் தேடித்திரிந்து ஒருவழியாக அவரை தரிசனம் செய்தனர். அவர்கள் வந்த காரணத்தை கேட்ட முனிவர் கண்களை மூடி தியானம் செய்தபின் அவர்களுக்கு பதில் சொன்னார்.

'மஹிஜித் இந்தப் பிறப்பில் பாவங்கள் ஏதும் செய்யாதவனாக இருந்தாலும் போன ஜன்மத்தில் செய்த பாவமே அவனை வாட்டுகிறது.

'போன ஜன்மத்தில் அரசன் ஒரு வியாபாரியாக
இருந்தான், வியாபார விஷயமாக வெகு தூரம் நடந்து செல்ல தாகம் எடுத்தது. அங்கு ஒரு குளம் கண்டான் . அங்கு ஒரு பசு தன் கன்றுடன் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது.

'அதைப்பார்த்த மன்னன் நாம் குடிக்கும் தண்ணீர் கலங்கிப்போய் விடுமே என்று அதை விரட்டினான். தாகத்தால் அந்தப்பசு நீர் குடிக்கமுடியாமல் ஓடியது. அந்த பாபத்தினால் தான் குழந்தை இல்லை'என்றார்.

இதைக் கேட்ட அமைச்சர்கள், அதனை நீக்கும் வழி கூறுமாறு கேட்க, 'பகவான் விஷ்ணுவே காக்கும் தெய்வம். அவரது முக்கிய அவதாரமான கிருஷ்ணாவ
தாரத்தைப் போற்றி விரதமிருந்து வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் தீரும்.

'அதிலும் ஸ்ரவண மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி நாளில் விரதமிருந்து வழிபடுவது உத்தமம். உங்கள் மன்னனை அந்த விரதத்தினை மேற்கொள்ள வழிகாட்டுங்கள். அந்த நாளில் உபவாசம் இருக்க வேண்டும். நாள் முழுவதும் நாராயண நாமம் உச்சரிக்க வேண்டும்.

'இரவில் கண்விழித்து அவனின் பெருமைகளைச் சொல்லும் புராணங்களை வாசிக்கவும் கேட்கவும் வேண்டும். இவ்வாறு செய்து துவாதசி அன்று விரதம் முடித்தால் முன்வினைப் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு நன்மைகள் உண்டாகும்' என்றார்.

அமைச்சர்கள் மகிழ்ந்து முனிவருக்கு நன்றிகூறி மன்னரிடம் வந்து முனிவரின் வார்த்தைகளைக் கூறினர்.

இதைக் கேட்ட மஹிஜித் மிகவும் மகிழ்ந்து மனைவியுடன் இணைந்து முனிவர் கூறியதுபோலவே ஏகாதசி விரதத்தை மேற்கொண்டான். அதன் பயனாக பகவான் கிருஷ்ணனின் அருளால் அவன் தேசம் மேலும் செழிப்புற்றதோடு அடுத்த ஆண்டே அவனுக்குக் குழந்தைச் செல்வமும் கிடைத்தது.

புத்திரப்பேறு வேண்டுவோர் இந்தநாளில் முறைப்படி விரதமிருந்து விஷ்ணுவை வழிபட சிறந்த மக்களைப் பெறுவர்.

#ஏகாதசி_விரதமுறை..
ஏகாதசி என்பது அமாவாசை மற்றும் பௌர்ணமி
யிலிருந்து 11வது நாள். பத்துநாள்கள் உடலும் மனமும் தொடர்ந்து இயங்கிக்
கொண்டிருக்க 11 நாள் அதற்கு ஓய்வு தரும் விதமாக மேற்கொள்ளப்படும் விரதமே ஏகாதசி விரதம்.

இந்த நாளில் உணவைத் தவிர்ப்பதால் உடல் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும். மேலும்
மனமும் அன்றாடக் கவலைகளிலிருந்து விலகி இறைவழிபாட்டில் ஈடுபட்டுப் புத்துணர்ச்சி கொள்ளும்.

அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் ஏகாதசி விரதமுறைகளை எடுத்துக் கூறியது...
ஏகாதசி விரதத்தை மார்கழி தேய்பிறை ஏகாதசியான உத்பத்தி அல்லது உத்பன்ன ஏகாதசி முதல் அனுஷ்டிப்பது உத்தமம். விரும்பினால் எந்த மாத ஏகாதசியிலிருந்தும் ஆரம்பிக்கலாம்.

முரன் என்ற அசுரனை  மகாவிஷ்ணு தன் சக்தியை ஏகாதசி என்ற பெயரில் அனுப்பி அழித்ததால் அன்றைய நாளில் விரதம் இருப்பவர்களின் சகல பாவங்களும் அழியும் என வரமளித்தார்.

தசமி அன்று ஒருவேளை மட்டும் உணவு உண்பது நலம். ஏகாதசி அன்று விடிகாலை எழுந்து முழுதும் உபவாசம் இருக்க வேண்டும். அரிசி உணவு தவிர்க்க வேண்டும். முடிந்தவர்கள் பால் பழங்கள் மட்டுமே சாப்பிடலாம்.
மறுநாள் துவாதசி அன்று துளசி தீர்த்தம் அருந்தி விரதம் முடிக்க வேண்டும். உணவில் அகத்திக்
கீரை, சுண்டைக்காய், நெல்லி சேர்த்துக் கொள்வது நலம்.

ஏகாதசி அன்று காலைபகவான் விஷ்ணு அல்லது கிருஷ்ணனின் படத்தை வைத்து மலர்கள் மற்றும் துளசியால் அர்ச்சித்து  வழிபட வேண்டும். நாள் முழுதும் நாராயண நாமம் சொல்வது நன்மைகள் பல தரும். மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம், அஷ்டோத்திரம்,கிருஷ்ணாஷ்டகம்,
நாராயணீயம் சொல்வது புண்ணியம் தரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சார்தாம் யாத்ரா..14

சார்தாம் யாத்ரா..9

சார்தாம் யாத்ரா..13