தர்மக்ஷேத்ரே..குருக்ஷேத்ரம்..2

 

குருவின் தியாகத்தை மெச்சிய விஷ்ணு அவருக்கு இரு வரங்கள் கொடுப்பதாய் சொல்ல, குருவும், ‘கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கப்போகும் இந்நகரம் தன் பெயரால் அழைக்கப்பட வேண்டுமென்றும், இங்கு இறப்பவர்கள் எத்தனை பாவம் செய்திருப்பினும், மோட்சம் பெற வேண்டும்’ என்றும் கேட்டார்.

கேடு செய்வோர்க்கும், வீடு பேறு தரும் நோக்கத்தில்தான் காக்கும் தெய்வம் கண்ண பரமாத்மாவும் போர் நடத்த இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தார் போலும். என்னே இறைவனின் கருணை! சரஸ்வதி, திருஷத்வதி என்ற இரு நதிகளுக்கிடையே அமைந்திருந்ததாம் இந்த நகரம். ஆனால் இந்த இரண்டு நதிகளுமே இன்று மறைந்து விட்டனவாம். பிரம்மக்ஷேத்ரா, பிருகு க்ஷேத்ரா, ஆர்யவரட், சமந்தபஞ்சக் என்ற பெயர்களைக் கொண்ட குருக்ஷேத்திரம் மகாபாரத காலத்தில் ‘பஹூதான்யகா’ (வளமையான நகரம்) என்ற பெயரைக் கொண்டிருந்தது.

ஆரியர்கள் காலத்திற்குப் பின் நலிவடைந்த குருக்ஷேத்திரம் ஹர்ஷரின் ‘பொற்கால ஆட்சி’யில் மிகச் சிறப்புப் பெற்று, கல்வி, கேள்விகளில் சிறந்து தலைநகரமாக விளங்கியது. நாட்டு மக்கள் விருந்தோம்பல், நன்னடத்தை, அறிவு, பண்பில் சிறந்து விளங்கியதாகவும், தலைநகர் மிகப் பெரிய கடை வீதிகள், பள்ளிகள், கல்லூரிகள், அரண்மனைகளுடன் மிக அழகாக விளங்கியதாகவும் சீனப் பயணி ஹூவான் சுவாங்கும், கவி பாணரும் தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். அதன் பின் முகலாய அரசர்களால் அழிக்கப்பட்டு பெருமை இழந்த இந்த நகரம் 1857-ல் ஆங்கிலேயரின் மாவட்டத் தலைநகராக மாறியது.

இங்கு மாபெரும் மகாபாரதப் போர் 5000 ஆண்டுகளுக்கு முன் பதினெட்டு நாட்கள் பயங்கரமாக நடந்ததில் 166,00,66,620 வீரர்கள் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. கேட்கும்போதே மனம் பதறுகிறதே! இங்கு தோண்டுமிடமெல்லாம் எலும்புக் கூடுகளாகவே இருக்குமாம். பூமி மண்ணும் செந்நிறமாக உள்ளது.பாரதப் போரில் நடந்த ஒவ்வொரு சம்பவம் சம்பந்தமாகவும், அபிமன்யு வதம் நடந்த இடம், கர்ணனின் சக்கரம் மாட்டிக் கொண்டது. பீஷ்மர் அம்புப் படுக்கை, துரியோதனன் இறந்த இடம் என்று பல இடங்கள் சரித்திரம் பேசுகின்றன.

பகவத் கீதையின் பிறப்பிடமாகப் போற்றப்படும் குருக்ஷேத்திரத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எண்ணற்ற லீலைகளைப் புரிந்திருக்கிறார். பதினெட்டு நாள்கள் நீடித்த மஹாபாரதப் போர், குருக்ஷேத்திரத்தில் அரங்கேறியது என்பதை நாம் அறிவோம். இப்புண்ணிய பூமி பிரம்மக்ஷேத்ரா, பிரம்மதேவி, உத்தரதேவி, தர்மக்ஷேத்திரம் என்றும் அழைக்கப் படுகிறது. குருக்ஷேத்திரத்தில் தற்போது காணப்படும் முக்கிய இடங்களைப் பற்றி தொடர்ந்து
பார்ப்போம்.
தொடரும்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரம் தரும் வரலட்சுமி 🙏வரம் தரும் வரலட்சுமி 🙏

யோகினி ஏகாதசி🙏🏼

புத்ரதா ஏகாதசி..(18.7.2020)