பூரி ஜகந்நாதர்..3
பூரியில் வருடம் தோறும் நடைபெறும் மாபெரும் ரதோத்சவம் உலகப் புகழ் பெற்றதாகும். இத்திருவிழா ஆடி மாதம் வளர்பிறை துவிதியை அன்று ஆரம்பித்து, திரயோதசி வரை நடைபெறும். அந்தக் குறிப்பிட்ட தினத்தன்று இறைவனை தரிசனம் செய்தால், மோட்சப் பதவி கிடைப்பது நிச்சயமான ஒன்று என்கின்றனர். மேலும் வாழ்க்கையின் சகல நன்மைகளும் கிடைக்கும் என்று நம்பப்படுவதால், ரதோத்சவம் சமயத்தில் பூரியில் பெருங்கூட்டம் கூடுகிறது!
#மனைவிஉத்தரவுடன் ஊர்வலம்!
ஆனி பௌர்ணமியன்று மூன்று தெய்வ உருவங்களுக்கும் ‘ஸ்நான யாத்ரா விழா’ என்ற பெயரில் குளியல் திருவிழா நடக்கும். பிறகு பதினைந்து நாட்கள் மூவரும் ஓய்வெடுப்பர். அச்சமயம் விக்ரகங்கள் படுத்த நிலையில் இருக்கும். பின் ஜகந்நாதருக்கு ஜூரம் கண்டு விடுவதால் தனியான ஒரு இடத்திலிருந்து சிகிச்சை பெறுவார். அப்போது பகவான், மஹாலக்ஷ்மியுடன் தனித்து இருப்பார். அதன்பின் தேவியின் உத்தரவுடன்தான் ரத யாத்திரைக்குக் கிளம்புவார்.
பின் ‘அந்தராகா’ என்ற பெயரில் கடவுளர் உருவங்களுக்கு புதிய வண்ணம் பூசி விடுகின்றனர். இதன் மூலம் விக்ரகங்கள் புதுப் பொலிவுடன் காணப்படும். இப்படி கண்கள் தவிர உடல் முழுதுக்கும் வண்ணம் பூசும் இந்த விழா ‘நேத்ரோத்சவா’ எனப்படும். இந்தப் புதிய வண்ணத்துடன் பளபளக்கும் விக்ரகங்கள் ரதத்தில் ஏற்றப்படும். முதலில் சுதர்சனம் பின் பலராமர், தொடர்ந்து ஜகந்நாதர் – சுபத்திரை!
#மூலவிக்ரகங்களே உலா போகும் சிறப்பு!
பொதுவாக எந்த ஆலயத்திலும் மூல விக்ரகங்கள் வெளியில் செல்லாது. உற்சவ விக்ரகங்களே வீதி உலாவுக்குச் செல்லும். இந்த ஆலயத்தில் மட்டுமே மூல தேவதைகள் கர்ப்பக்கிரகத்தை விட்டு வெளியில் செல்லும் உற்சவம் நடக்கிறது.
தொடரும்..
கருத்துகள்
கருத்துரையிடுக