தர்மக்ஷேத்ரே..குருக்ஷேத்ரம்..3

 





அடேயப்பா! இவ்வூரில் கால் வைத்த இடமெல்லாம் ஆலயங்கள். கண் திரும்பிய இடமெல்லாம் புண்ணிய தீர்த்தங்கள். ஒவ்வொரு தீர்த்தமும் எத்தனை பிரம்மாண்டமானவை. பார்க்கும்போதே பிரமிக்க வைக்கின்றன.

கி.பி. 11-ம் நூற்றாண்டில் ‘அல்பெருனி’ என்ற அறிஞரால் ‘கிதாப்-உல்-ஹின்ட்’ என்ற நூலில் ‘ஒரு பெரிய கடல் போன்று காணப்படுவதாக’ எழுதப்பட்ட , பிரம்மசரோவர் 3860 அடி நீளமும், 1880 அடி அகலமும் கொண்டது. படைப்புக் கடவுள் பிரம்மாவினால் உண்டாக்கப்பட்ட இத்தீர்த்தத்தில் சூரிய கிரகணத்தன்று உலக முழுவதிலிருந்து மக்கள் புனித நீராடுவதற்கென்று இங்கு வருகிறார்களாம். பதினைந்து லட்சம் பேருக்கு மேல் புனித நீராடுவதாகக் கூறப்படுகிறது. இப்புனித பிரம்ம சரோவர் குளத்தில் நீராடினால் அக உடலும், புற உடலும் தூய்மையாகும் எனபது நம்பிக்கை.

இக்குளத்தின் நடுவில் சர்வேசுவர் மகாதேவ் ஆலயம் உள்ளது. ஆலயத்திற்கு செல்ல அழகான பாலம் ஒன்று உள்ளது. இம்மகா
தீர்த்தத்தின் இரு கரைகளில் போரின் சமயம் பாண்டவ, கவுரவர்கள் தங்கியிருந்தார்களாம். இதன் வட திசையில் கவுரவ, பாண்டவ ஆலயம் உள்ளது. இக்குளத்தின் நடுவில் ‘புருஷோத்தம்புரா’ என்ற இடத்தில் ‘சந்த்ர கூப்’ எனும் கிணறு உள்ளது. இதில்தான் பாண்டவர்களும், திரவுபதியும் நீராடுவார்களாம். இதையெல்லாம் காணும்போது நம் மனம் மகாபாரத காலத்துக்கே செல்வதைத் தடுக்க முடியவில்லை.

மகாபாரதப் போர் என்றதுமே நம் நினைவில் தோன்றுவது கீதோபதேசக் காட்சி. தீர்க்கதரிசியான பகவான், பகவத் கீதையை உபதேசிக்க குருக்ஷேத்திரம் சரியான இடம் என்பதை அறிந்தே, இவ்விடத்தை பாரதப் போர் நடத்தத் தேர்ந்தெடுத்தார். போரின் சமயம் அர்ஜூனனைக் காப்பாற்றும் பொருட்டு சூரிய கிரகணத்தை, கிருஷ்ணர் உருவாக்கி
யதால், சூரிய கிரகணத்
தன்று இங்குள்ள தீர்த்தங்களில் நீராடுவது மிக்க பலன் தருவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக மறுபிறவி கிடையாது என்ற நம்பிக்கை.

இங்குள்ள ‘ஜ்யோதிசர் தீர்த்’ என்ற இடமே அர்ஜூனனுக்கு பகவான் கீதையை போதித்த இடமாகும். மனம் வெதும்பி, தைரியம் இழந்து, உளம் சோர்ந்து, விரக்தி அடைந்து அர்ஜூனன் போர் செய்ய மறுத்தபோது, கண்ண பரமாத்மா தர்ம, அதர்மத்தை விளக்கி, மறத்தை நீக்கி, அறத்தை நிலை நாட்டுவதே க்ஷத்திரிய தர்மம் என எடுத்துக் கூறி ‘பிறப்பும், இறப்பும் என்றும் நிகழக் கூடியது; உன் கடமையைச் செய், பலனை எதிர்பாராதே! தர்மத்தை நிலை நாட்ட போர் செய்ய வேண்டியது க்ஷத்திரியனாகிய உன் கடமை. பாசங்களிலிருந்து மனதை விலக்கி உன் கடமையைச் செய்!’ என்று அறிவுறுத்தி, தன் விசுவரூப தரிசனத்தைக் காட்டி, அர்ஜூனனை உற்சாகம் பெறச் செய்த இடம். அவ்விடத்தைக் காணும் போதே மெய் சிலிர்க்கிறது.

‘ஆகா! அந்தக் காட்சி எப்படி இருந்திருக்கும்?’ என்று மனக் கண்ணால் கற்பனை செய்யத் தோன்றுகிறது. அன்றிலிருந்து இன்று வரை அந்நிகழ்ச்சிக்கு சாட்சியாய் நிற்கும் பெரிய ஆலமரம், 5000 வருடத்திற்கு முற்பட்ட வடவிருக்ஷம். பல முறை வெட்டியும் துளிர்த்து விட்டதாம். இம்மரத்தின் வேரும், விழுதுகளும் கீதோபதேசம் கேட்ட புண்ணியம் பெற்றிருக்குமோ? ஆலமரத்தின் விழுதுகளை வெட்டி அதனைச் சுற்றி கம்பி வலை போட்டு பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

மரத்தின் கீழ் பளிங்கிலான கிருஷ்ணனின் பாதங்களும், கீதோபதேசக் காட்சியும் கண்ணாடிப் பெட்டிக்குள் உள்ளன. அருகிலேயே பெரிய அளவிலான கீதோபதேசக் காட்சியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
தொடரும்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சார்தாம் யாத்ரா..14

சார்தாம் யாத்ரா..9

சார்தாம் யாத்ரா..13