பூரி ஜகந்நாதர்..4

 


பூரி மகாராஜா, தங்க விளக்குமாறால் ரதங்களை சுத்தம் செய்து, சந்தனம், பன்னீர் தெளித்தபின் மூன்று ரதங்களும் ஒன்றன் பின் ஒன்றாக, அழகாக ஆடி ஆடிச் செல்லுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்குமாம்!


ஜகந்நாதரின் ரதம் 44அடி உயரமும் 16 சக்கரங்களும் கொண்டு சிவப்பு, மஞ்சள் துணிகளால் போர்த்தப்பட்டிருக்கும். இதற்கு ‘நந்திகோஷ்’ என்று பெயர். பலராமரின் ‘தாளத்வஜா’ என்ற ரதம் 44 அடி உயரமும் 14 சக்கரங்களும் கொண்டு, சிவப்பு, பச்சைத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டும், சுபத்திரையின் தேர் 43 அடியும் 12 சக்கரங்களும் கொண்டு சிவப்பு, கருப்புத் துணிகளால் அலங்காரமும் செய்யப்பட்டிருக்கும். அதன் பெயர் ‘பத்மத்வஜா’.


#4000பேர் இழுக்கும் பிரம்மாண்ட தேர்!


இவ்வாறு ஏக அமர்க்களத்துடன், கம்பீரமாக, அசைந்தாடிச் செல்லும் மூன்று ரதங்களும், 4000 பேருக்கு மேற்பட்டவர்களால் இழுத்துச் செல்லப்பட்டு, குண்டிச்சா கோயிலை அடையும். அரைகுறையாக இறைவனின் உருவங்கள் அமையக் காரணமான இந்த குண்டிச்சா தேவியை சமாதானம் செய்யவே மூன்று தெய்வங்களும் அவரது இருப்பிடத்திற்குச் செல்கிறார்கள். அங்கு 7 நாட்கள் தங்கியிருக்கும் சமயம், ஜகந்நாதர் கோயிலில் நடைபெறுவது போன்றே எல்லா முறைகளும் நடைபெறும். பின் மூன்று மூர்த்திகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஆலயம் நோக்கிப் புறப்படுவர்.


#தகதகக்கும் தங்க உடை


வரும் வழியில் ஜகந்நாதர் அரசரின் அரண்மனை சென்று, அங்கு மஹாலக்ஷ்மியுடன் மகிழ்ச்சியாக இருந்து பூரி திரும்புவார். இரவு முழுதும் ரதத்தில் இருப்பார். ஏகாதசி அன்று தங்க நிற உடை, தங்க நகைகளுடன் மூர்த்திகள் தக தகவென்று பிரகாசிப்பார்கள். அது மிக சிறப்பான, புண்ணியம் தரும் தரிசனம் என்பதால், மக்கள் ரதத்தை பிரதட்சணம் செய்து, விழுந்து வணங்குவர். சில மணி நேரத்தில் ஆபரணங்கள் களையப்பட்டு ஆலயம் செல்வார் ஜகந்நாதர்.


#மூட்அவுட் ஆகும் மகாலட்சுமி


பத்து நாட்களாக சுற்றுப்பயணம் செய்துவிட்டு களைப்புடன் வரும் கணவரிடம் மகாலக்ஷ்மி கோபம் கொண்டு உள்ளே விட மறுப்பதன் அடையாளமாக ‘தேவிதாசிகள்’ என்போர் ஆலயக் கதவை மூடி விடுவார்களாம்! தன்னை விட்டு தன் புருஷன் அவரது தங்கையுடன் ஊர் சுற்றி விட்டு வந்தால் மனைவிக்குக் கோபம் வராதா என்ன? அன்னை சற்று ஊடல் செய்ய, பின் பகவான் லக்ஷ்மியை சமாதானம் செய்து பரிசுகள் தருவதாகக் கூற, தேவி கோபம் நீங்கி உள்ளே வர அனுமதி தருவாளாம்!. ஜகத்துகே நாதனானாலும் கட்டிய மனைவியை தாஜா செய்யத்தான் வேண்டியுள்ளது!

#தொடரும்..கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்புள்ள அப்பா 🙏🏼..11.6.'22

மேல்நாட்டு மருமகள்!

சார்தாம் யாத்ரா..9