குருவாயூருக்கு வாருங்கள்..8

 


குருவாயூரப்பனை தரிசித்து விட்டோம். இனி அங்கு தினசரி நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி...

குருவாயூர் கிருஷ்ணணை தரிசித்த பின், அருகில் உள்ள மம்மியூர் சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் சிவன் – பார்வதியை வழிபட்டாலேயே குருவாயூர் தரிசனம் முழுமை பெறும் என்பது ஐதீகம். மிகப் பழமையான மம்மியூர் ஆலயம் மிக அருமையாக உள்ளது. 


ஆண்கள் மேல் உடை இல்லாமல் வேட்டியுடனும், பெண்கள் தங்களது கலாசார உடைகளை அணிந்தும் குருவாயூரப்பனை தரிசிக்கச் செல்ல வேண்டும்.


நடை மூடும் முன் எட்டு வகை மூலிகைகளால் ஆன தீபத்தூள் கொண்டு திருப்புகை காட்டப்படும். இதற்கு கிருமிகளை அழிக்கும் வல்லமை உண்டு.


தங்கக் கலசங்களில் நிரப்பிய புனித நீரால் ‘பிரம்ம கலச மந்திரம்’ சொல்லிக் கொண்டு தினசரி கும்பாபிஷேகம் செய்யப்படுவது இந்த ஆலயத்தின் சிறப்பு.


குருவாயூரில் துலாபாரம் பிரசித்தமானது. தங்களது வேண்டுதலை ஒட்டி எடைக்கு எடை தங்கம், வெள்ளி, நாணயங்கள், பழங்கள், சர்க்கரை, கரும்பு, வெண்ணெய், பன்னீர், தேங்காய், வாழைப்பழம் ஆகியவற்றை பக்தர்கள் வழங்குகின்றனர். சொறி, சிரங்கு போன்ற தோல் நோய் பீடிக்கப்பட்டவர்கள், இங்கு எடைக்கு எடை சேனைக் கிழங்கை காணிக்கை செலுத்துகிறார்கள். இங்கு பிற மதத்தவரும் துலாபாரம் செலுத்துகிறார்கள்.


எல்லா நாட்களிலும் இங்கு அன்னப் பிராசனம் எனப்படும் சோறு ஊட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்குக் குழந்தை பிறந்தால், இங்கு வந்து சோறு ஊட்டுவதாக வேண்டிக் கொண்டு, அது நிறைவேறியதும் இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.  


குருவாயூரப்பனின் சந்நிதியில் சோறூட்டினால்,குழந்தைகள் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வளர குருவாயூரப்பன் அருள் புரிவான் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

தொடரும்..கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்புள்ள அப்பா 🙏🏼..11.6.'22

மேல்நாட்டு மருமகள்!

சார்தாம் யாத்ரா..9