குருவாயூருக்கு வாருங்கள்!
இன்று முதல் என்னப்பன் குருவாயூரப்பன் ஆலய தரிசனம்🙏🏼
குருவாயூருக்கு வாருங்கள்!
குருவாயூரப்பன் நாமம் பாடிடுவோமே|
குறையில்லா வாழ்வுதனை நாடிடுவோமே|
என்னப்பன் குருவாயூரப்பனைப் பற்றி பாடவோ பேசவோ இந்த ஜன்மம் போதாது.
குருவாயூர் போகவேண்டும் என்று நிறைய நாட்களாக நான் சொல்லிக் கொண்டிருக்க, இரண்டு வருடம் முன்பு (2019) மார்ச்சில் திடீரென்று என் கணவர் 'நாம் நாளை குருவாயூர் செல்கிறோம்' என்றவரை நான் ஆச்சரியமாகப் பார்க்க, 'உன் ஆசையை நிறைவேற்றுவதே ஈசன் எனக்கிட்ட பணி'என்று தலை சாய்த்து சொல்ல என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை!
நாற்பது வருடங்களுக்கு பின் குருவாயூர் தரிசனம். என் எண்ணம் முழுதும் கிருஷ்ணஸ்மரணை. திருச்சியிலிருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸில் பயணம். ரொம்....ப நாளைக்கு பிறகு ரயில் பயணம்..படித்துக் கொண்டும், தூங்கிக் கொண்டும், பக்கத்து சீட் பயணிகளுடன் பேசிக்கொண்டும்!
நாங்கள் அங்கிருந்த இரண்டு நாட்களும் குட்டிக் கண்ணனை தைலாபிஷேகம், சந்தனக்காப்பு, மலர் அலங்காரம், அத்தாழபூஜை என்று ஏழுமுறை வரிசையில் சென்று தரிசித்தும்,அவனை தரிசிக்கும் ஆவல் தணியவில்லை!
ஒவ்வொரு அலங்காரத்திலும் ஒவ்வொரு அழகில் மாயப் புன்னகை செய்கிறான் அந்த மாமாயன் மாதவன்! இந்த அழகுதான் அன்று ராதையையும் கோகுலத்து கோபியரையும் இவனிடம் காதல் கொள்ள வைத்ததோ!
குருவாயூரின் வரலாறு நாம் அறிந்ததே. ஶ்ரீகிருஷ்ணனால் பூஜிக்கப்பட்ட பாதாளஅஞ்சனம் என்ற விலை மதிப்பற்ற கல்லினால் செய்யப்பட்ட சங்கு சக்கரம் கமலம் கதாயுதம் கழுத்தில் துளசிமாலை முத்து அட்டிகை தரித்த மகாவிஷ்ணு
வின் திருச்சிலை, பிரகஸ்பதி மற்றும் வாயு பகவானால், ஶ்ரீமகாதேவரின் ஆணைப்படி பூலோகவைகுண்டம் எனப்படும் இத்தலத்தில் ருத்ரதீர்த்தத்தின் கரையில் நிறுவப்பட்டது. அதுவே குருவாயூரப்பன் இங்கு கோவில் கொண்ட வரலாறு.
தொடரும்..
கருத்துகள்
கருத்துரையிடுக