பூரி ஜகந்நாதர்..



இன்று பூரி ஜகன்னாதர் ரதோத்ஸவம். பூரி ஆலயம் பலரும் தரிசித்திருப்பீர்கள். இந்தப் புண்ணிய தினத்தில் ஜகன்னாதர் ஆலயம் பற்றி அறிவோம்🙏🏼

சகோதரஒற்றுமையை உணர்த்தும் பூரி ஜகந்நாதர்

பூரி ரத்யாத்ரா..12.7.'21

சிவ ஸ்தலங்களை அடுத்து விஷ்ணு கோயில்களே நம் நாட்டில் அதிகம். இந்த விஷ்ணு ஸ்தலங்களில் மகாவிஷ்ணு தனியாகவோ அல்லது மனைவி மகாலட்சுமி சகிதமாகவோதான் காட்சியளிப்பார். ஆனால் ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் வித்தியாசமான ஒரு கூட்டணியில் காட்சியளிக்கிறார் மகாவிஷ்ணு. அண்ணன் பலராமன் மற்றும் தங்கை சுபத்ராவுடன்தான் இங்கே காட்சி தருகிறார் விஷ்ணு.

உலகின் முக்கிய திருவிழா!கி.பி. 1200-ல் உருவாக்கப்பட்ட இந்த பூரி ஜகந்நாதர் ஆலயம், இந்தியாவின் நான்கு முக்கிய புனித ஸ்தலங்களுள் ஒன்று வடக்கே பத்ரிநாத், தெற்கே ராமேஸ்வரம், மேற்கே துவாரகாநாத் போல, கிழக்கே ஜகந்நாத் பூரிதான். மகாமகம், கும்பமேளா, மதுரை கள்ளழகர் திருவிழா, திருவாரூர் தேர்த் திருவிழா, மைசூர் தசரா என்று ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு முக்கியத் திருவிழா இருப்பது போல பூரியில் ரத யாத்திரை ரொம்ப ரொம்ப ஃபேமஸ்.

அரைகுறை விக்ரகங்கள்தான்!

ஒரு விசேஷம் என்னவென்றால் இந்த ஆலயத்தில் உள்ள விக்ரகங்கள் அரைகுறையாக வடிவமைக்கப்பட்டது போலிருக்கும். உண்மையிலேயே இவை பாதி வடிவமைக்கப்பட்ட நிலையில் இருப்பவைதான். இதற்கு ஒரு புராணக் கதையே உண்டு.

சத்ய யுகத்தில் இந்திரத்யும்னன் என்றொரு அரசன் இருந்தான். அவன் மஹாவிஷ்ணுவின் தீவிர பக்தன். ஒரு நாள் அவனுக்கு ஒரு அசரீரி கேட்டது. அதன் வாக்குப்படி அவனுக்கு நதியில் ஒரு மரக்கட்டை கிடைத்தது. அசரீரி சொன்னபடி அதில் விக்ரகம் அமைக்க சரியான சிற்பிதான் அமையவில்லை.

இந்த நிலையில் ஒரு முதியவர், தன்னால் அந்தச் சிலைகளை வடிவமைத்துக் கொடுக்க முடியும் என முன் வந்தார். பூட்டிய அறையில்தான் சிலைகளை வடிவமைப்பேன் என்றவர், அதற்கு 21 நாட்கள் ஆகும் என்றும், அதுவரை அந்த அறையின் கதவை யாரும் திறக்கக் கூடாது என்றும் வினோதமான ஒரு நிபந்தனை வைத்தார். மன்னனும் அதற்கு ஒப்புக் கொண்டு ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்தார்.

நாட்கள் மெதுவாக நகர்ந்தன. கிழவரும் மும்முரமாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் ராணி குண்டிச்சா தேவியால்தான் பொறுமையாக இருக்க முடியவில்லை. கெடு முடிவதற்கு ஆறு தினங்களுக்கு முன்பே... அதாவது, பதினைந்து நாட்களிலேயே கதவைத் திறக்கும்படி அவர் கேட்க மன்னரும் கதவைத் திறக்கும்படி உத்தரவிட்டார். அங்கே அரைகுறையாக வடிவமைக்கப்பட்ட சிலைகள்தான் இருந்தன. 

மன்னனுக்கு மிகவும் கஷ்டமாகி விட்டது! அப்போது அவருக்கு ஒரு அசரீரி கேட்ட்து. அந்த அரைகுறை சிலைகளையே பிரதிஷ்டை செய்து பூஜிக்குமாறு அந்த அசரீரி சொல்ல, மன்னனும் அவ்வாறே செய்தான். அந்த அரைகுறை உருவங்கள்தான் இன்று நாம் பூரியில் காணும் திருவுருவங்கள்...!

தொடரும்...



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிறந்தவீடு (சிறுகதை)(27.2.'21)

Garden_to_table..1

குருவாயூருக்கு வாருங்கள்..9