நாராயணீய மகிமை🙏🏼

 





குருவாயூரைப் பற்றி எழுதிவிட்டு நாராயணீயம் பற்றியும் அறிந்து கொள்வது அவசியமாயிற்றே! 

குருவாயூர் என்றாலே கூடவே நினைவுக்கு வருவது நாராயணீயமும் அதை எழுதிய மேல்பத்தூர் நாராயண பட்டதிரியும்(1560 - 1632).

குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணனை முன்னிறுத்தி, பாகவதத்தின் சாரமாக, வட மொழியில் பக்தி சொட்டச் சொட்ட எழுதப்பட்ட கிருஷ்ண காவியமே ‘நாராயணீயம். 


இறையருளால் இளம் பிராயத்திலேயே அனைவரும் அதிசயக்கும் படியான அறிவு, ஆற்றல், பாண்டித்யம் பெற்றுத் திகழ்ந்தார் பட்டதிரி. அச்சுத பிஷரோடி இவரது குரு. தனக்கு இலக்கணம் போன்றவற்றைக் கற்றுக்கொடுக்கும் குரு  வாதரோகம் என்ற நோயினால் கஷ்டப்படுவதைக் கண்டு மனம் கலங்கிய பட்டதிரி தன் நன்றிக் கடனாக குரு தட்சணையாக குருவின் நோய் அவரை விட்டு விலகி தன்னைப்பற்றிக் கொள்ளட்டும் என்று கடவுளிடம்  வேண்டிக்கொண்டு தானே வலிய வரவழைத்துக்

கொண்டார்.


துஞ்சத்து எழுத்தச்சன் என்பவரிடம்  அந்த நோய் நீங்கும்பொருட்டு செய்ய வேண்டியது யாதெனக் கேட்டார் பட்டதிரி. அவர் அறிவுறுத்தலின்படி,  குருவாயூர் தலத்திற்கு வந்து ஸ்ரீ குருவாயூரப்பன் சந்நிதியில் ஸ்ரீமத் பாகவத சரித்திரத்தை வடமொழி சுலோகங்கள் மூலம் விளக்கிக் கூறி வழிபட்டுத் துதி செய்தார். நோயின் தாக்கத்தினால் கைகள் எழுத முடியாத நிலையில் பட்டத்திரி சொல்லச் சொல்ல அவரது தம்பி ஓலைச்சுவடியில் எழுதி நமக்கு அளிக்கப்பட்டதே  ஸ்ரீமந்

நாராயணீயம் என்னும் வரப்பிரசாதம் ஆகும்.


குருவாயூரப்பன் சன்னிதியில் 100 நாட்கள், ஒரு நாளுக்கு ஒரு தசகம் (10 சுலோகங்களுக்குக் குறையாமல் கொண்டது) என்ற கணக்கில், 1036 சுலோகங்கள் இயற்றினார். ஒவ்வொரு தசகம் முடியும்போதும் ஆண்டவனிடம் தான் எடுத்துக் கொண்ட நோயினின்றும் தன்னைக் காக்கும்படி வேண்டும் வாக்கியமும் அந்த சுலோகங்களில் இருக்கும்.

நாராயணீயத்திற்கு அவர் எடுத்துக்கொண்ட பொருள் ஸ்ரீமத் பாகவதமே.மகா

விஷ்ணுவின் எல்லா அவதாரக் கதைகளும், முக்கியமாக கண்ணன் லீலைகள் அத்தனையும் உயர்ந்த பக்திப் பெருக்குடனும் உணர்ச்சியுடனும் சொல் அலங்காரங்களுடனும் சித்தரிக்கப்பட்ட ஒரு அற்புத நூல். இலக்கியம் முடியும் 100வது நாள் அவருடைய நோயும் விலகி அவருக்கு ஆண்டவனின் திவ்ய தரிசனமும் கிடைத்ததாம்.


அவரது பக்திக்கு கட்டுண்ட ஸ்ரீகுருவாயூரப்பன் அவ்வப்போது தன் தலையை  அசைத்து  அவரது தோத்திரங்களை அங்கீகாரம் செய்தாராம். அதுவும் பிரகலாத சரித்திரத்தை, பட்டதிரி வர்ணிக்கும்போது

மூலஸ்தானத்திலிருந்து சிங்கத்தின் கர்ஜனைக் கேட்டதாம். நரசிம்மனாகக் காட்சியளித்ததாகவும் கூறப்படுகிறது.


1587ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 28ஆம் நாளில் ஸ்ரீ பட்டதிரி அவர்கள் ஸ்ரீமந் நாராயணீயம் காவியத்தை கிருஷ்ணன் பாதங்களில் சமர்ப்பித்து அனைவருக்கும் பெருமை கொடுத்த நாள். பட்டதிரி தினம் ஒரு தசகம் வீதம் 100 நாட்களில் ஸ்ரீமந் நாராயணீயத்தை கார்த்திகை மாதம் 28ம் தேதி பூர்த்தி செய்ததால் (டிஸம்பர் 1587ல்) நாம் எல்லோரும் தினம் ஒரு தசகம் பட்டதிரியை மனதில் நினைத்துக் கொண்டு கார்த்திகை 28ம் தேதியன்று பூர்த்தியடையும்படி படிப்பது மிகுந்த விசேஷம்.  


புகழ்பெற்ற ஸ்ரீகுருவாயூரப்பன் ஆலயத்தில் நடைபெறும் வருடாந்திர உற்சவ தினங்களில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஸ்ரீமந் நாராயணீய தினம் என்று விசேஷமாக கொண்டாடப்படுகின்றது.


எந்த நோயையும் நீக்கும் அருமருந்தான நாராயணீய ஸ்லோகமாக மகாபெரியவர் சொன்னது..

அஸ்மிந் பராத்மந் / நநு பாத்மகல்பே

த்வமித்தம் உத்தாபித/பத்மயோநி

அநந்த பூமா /மம ரோகராசிம்

நிருந்த்தி / வாதாலயவாஸ விஷ்ணோ//


🙏🏼ஓம் நமோ பகவதே வாசுதேவாய:🙏🏼

என் கட்டுரைக்கு கிடைத்த அழகிய சான்றிதழுக்கு அட்மின் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🏼

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சார்தாம் யாத்ரா..14

சார்தாம் யாத்ரா..9

சார்தாம் யாத்ரா..13