கீதை எனும் புண்ணிய நூல்🙏🏼
குருக்ஷேத்திரம் பற்றி எழுதிவிட்டு கீதை பற்றி எழுதாமல் முழுமை அடையாது.
இறைவனின் திருஅவதாரங்கள், மஹான்கள் தோன்றிய தினத்தையே 'ஜெயந்தி'யாகக் கொண்டாடுவது போல் பகவத்கீதைக்கு மட்டுமே ஜெயந்தி தினம் கொண்டாடப்படுகிறது.
26 வகையான கீதைகள் இருந்தாலும், உண்மையில், 'கீதை' என்னும் சொல், 'பகவத் கீதை'யையே குறிக்கிறது.
முதன் முதலில் கீதை உபதேசிக்கப்பட்டது சூரியபகவானுக்கே. காலப் போக்கில், இதன் கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால், மீண்டும் இதை அர்ஜூனனுக்கு உபதேசிப்பதாக, ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவே கூறுகிறார்.
கடலெனத் திரண்டிருக்கும் படைவீரர்களின் நடுவில், பார்த்தனுக்கு பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட தினமே 'கீதா ஜெயந்தி'. பார்த்த சாரதியான ஸ்ரீகிருஷ்ணர், மன்னுயிர்கள், வாழ்வென்னும் ரத யாத்திரையை வெற்றிகரமாக நிறைவேற்றி, தம்மை வந்து அடையும் பொருட்டு உபதேசித்ததே 'பகவத் கீதை'
கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: ஸாஸ்த்ரஸங்க் ரஹை:
வேதங்கள் கூறும் தத்துவங்களின் சாரமே பகவத் கீதை. கீதையின் பெருமையை விளக்க, வார்த்தைகளே இல்லை. இந்த தத்துவநூல், இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாட்டினரையும் ஆகர்ஷித்ததால், கீதா ஜெயந்தி, சிங்கப்பூர், மலேசியா, பாலி, கம்போடியா, ஆக்லாந்து, பெர்த், மெர்ல்போன், கேன்பரா உட்பட பல நாடுகளில் கொண்டாடப்படுகின்றது.
அன்றைய தினம் ஏகாதசி என்பதால், முழுநேர உபவாசமிருக்கிறார்கள். தனியாகவோ பலர் சேர்ந்தோ, கீதையின் 700 ஸ்லோகங்களையும் பாராயணம் செய்கிறார்கள்.
அர்ஜூனனுக்கு, ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசம் செய்த இடமாகிய குருக்ஷேத்திரத்தில், கீதா ஜெயந்தி, மிகுந்த விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. அங்கு இது ஐந்து நாள் திருவிழா. பிரம்மசரோவரத்தில், தீப வரிசைகள் ஒளிர, உள்ளத்தில் ஞான ஒளி வீச வேண்டி, கீதையைப் பாராயணம் செய்து, ஸ்ரீகிருஷ்ணரை வழிபடுகின்றார்கள்.
எத்தகைய துன்பத்தில் இருப்போரும், பகவத் கீதையை ஒரு முறை பாராயணம் செய்ய, தெளிவு பெறுவது நிச்சயம். இறைவனின் வெளி வந்த பகவத் கீதை இறைவனுக்குச் சமமாக வழிபடப்படுகிறது. உபநிஷதங்களில் இருக்கும் அரிய கருத்துக்களின் சாராம்சமே பகவத் கீதை.
கீதா சாரம்:
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக