ஆஷாட ஏகாதசி

 



‘ஏகாதசிக்கு மிஞ்சிய விரதம் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு மாதத்தில் இருமுறை வரும் ஒவ்வோர் ஏகாதசியும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. அப்படி ஆஷாடமாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு தேவசயனி ஏகாதசி என்று பெயர்.இது ஆடியில் வருவதாலும் பாண்டு ரங்கனைத் துதிக்கும் சிறப்பாலும் ஆஷாட ஏகாதசி 

என்று பெயர். 


சயனம் என்றால் உறக்கம். தேவர்களும் மகாவிஷ்ணுவும் உறங்கச் செல்லும் நாள் தேவசயனி ஏகாதசி. இந்த நாளில்  யோக நித்திரை கொள்ளும் மகாவிஷ்ணு பின்பு கார்த்திகை மாதத்தில்வரும் பிரபோதினி ஏகாதசி அன்றுதான் கண்விழிப்பதாக ஐதிகம். இதைத் தொடர்ந்துவரும் பௌர்ணமியிலிருந்து சாதுர்மாஸ்ய விரதம் தொடங்குகிறது.


இந்த ஏகாதசி ஆஷாட ஏகாதசி எனவும் போற்றப்படுகிறது. பண்டரிபுரத்தில் காட்சி தரும் பாண்டுரங்கனை தரிசிப்பது புண்யம் தரும் என்று கூறப்படுகிறது.


ஏகாதசி மஹாத்மியம் என்னும் நூலில் பகவான் கிருஷ்ணரே இந்த ஏகாதசி விரதத்தின் மகிமைகளைப் போற்றிக்கூறியிருப்பதால்,   கிருஷ்ண பரமாத்மாவின் காலத்துக்கு முன்பாகவே ஏகாதசி விரதங்கள் புகழ்பெற்று விளங்கினதாக அறியப் படுகிறது. 


சூரிய வம்சத்தில் பிறந்த மன்னன் மாந்தாதா.அவன் ஆட்சியில் நாடு சுபிட்சமாக இருந்தது. ஒருமுறை அவன் நாட்டில் மழை குறைந்து பஞ்சம் ஏற்பட்டபோது. தான் நீதி வழுவாமல் ஆட்சி புரிந்தும் இப்படி ஆகிவிட்டதே என்று வருந்திய மன்னன் இதன் காரணம் அறிய கானகம் சென்று ஆங்கிரஸ முனிவரைச் சந்தித்து ஆசிபெற்றான். அப்போது தன் நாட்டின் பஞ்சத்துக்கு என்ன காரணம் என்று கேட்டார்.


இதைக் கேட்ட முனிவர் 'உன் நாட்டு மக்களில் ஒருவன் செய்த பாவமே உன் நாட்டை இப்படி வாட்டுகிறது. நீ அவனைத் தேடிக் கண்டுபிடித்துக் கொலை செய்துவிட்டால் இந்தப் பஞ்சம் நீங்கிவிடும்' என்றார்.


அதைக் கேட்ட மன்னன் திடுக்கிட்டு 'ஓர் உயிரைக் கொல்லும் பாவத்தைச் செய்யாமல், இதிலிருந்து மீள முடியாதா' என்று கேட்டான். இதைக் கேட்ட மகரிஷி குடிமக்கள் மீதான அவன் அன்பை உணர்ந்து மகிழ்ந்து 'ஆஷாட மாதத்தில் வரும் ஏகாதசி விரதத்தை நீயும் உன் நாட்டு மக்களும் விரதம் இருந்து அந்த நாராயணரை வழிபட்டால், அவர் ஜல நாராயணராக பெருமழை பெய்து உன் நாட்டின் பஞ்சத்தைப் போக்குவார்” என்று ஆசிவழங்கினார். 


மன்னனும் அவ்வாறே விரதம் இருந்து வணங்கினான். முனிவர் சொன்னதுபோல் பெருமழை பொழிந்து பஞ்சம் நீங்கியது. அன்று முதல் தேவசயனி ஏகாதசி என்பது கஷ்டமான  நேரடங்களில் கடைப்பிடித்துப் பயன் பெற வேண்டிய ஏகாதசிவிரதமாகப் போற்றப்பட்டது என்று கிருஷ்ணர் விளக்கினார்.


பொதுவாக ஏகாதசி விரதம் என்பது மூன்று நாள்கள் கொண்டது. ஏகாதசிக்கு முன் தினம் அதாவது தசமி திதி அன்று இரவு உணவைத் தவிர்க்க வேண்டும். மறுநாள் காலையில் நீராடி பெருமாளை வணங்கி விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் அல்லது நாராயண மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். 


ஏகாதசி அன்று முழு உபவாசம் இருப்பது நல்லது. முடியாதவர்கள் அரிசி சாதத்தை தவிர்க்க வேண்டும். ஏகாதசி அன்று துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். அதற்கான துளசியை தசமி அன்றே பறித்துவைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் துவாதசி காலையில் பாரணை செய்து விரதம் முடிக்க வேண்டும்.


இந்த விரதம் இருப்பதால் செய்த பாவங்கள் தீரும். ஆன்மிக சக்தி அதிகரித்து முழுமை கிடைக்கும். பாபத்தினால் செய்த தீமைகள் மறைந்து வாழ்வு வளம் பெறும்.


மறுநாள் வரும் துவாதசி 'வாசுதேவ துவாதசி' ஆகும். இந்த நாளில்  காலையில் நீராடி பகவான் கிருஷ்ணரை முழுமுதற்கடவுளாக எண்ணி வழிபட வேண்டும். மேலும் வாசுதேவ துவாதசி அன்று செய்யும் தானிய தானம் பல மடங்கு பலன் அளிக்கக் கூடியது. 


பண்டரிபுரத்தில் முக்கிய நாளாக ஆஷாட ஏகாதசி கொண்டாடப்படுகிறது .


ஸ்ரீ பாண்டுரங்க ஸ்ரீ துக்காராம் மகாராஜ் அவர்களும் ஸ்ரீ ஞானேஸ்வரரும் தமது பக்தர்களுடன் ஸ்ரீ பாண்டுரங்கனை தரிசிக்க 200 கிலோமீட்டர் பாத யாத்திரையாக  வந்து பண்டரிபுரம் அடைந்த நாள் ஆஷாட ஏகாதசி நாளாகும் .


ஒவ்வொரு ஆண்டும் இந்த சமயத்தில் மராட்டிய மாநிலம் தேஹு என்னும் இடத்திலிருந்து ஸ்ரீ துகாராம் அவர்களின் பாதுகைகளை தாங்கிய பல்லக்கு ஏராளமான பக்தர்களுடன் பண்டரிபுரம் நோக்கி வருகிறது.


பக்தர்கள் பாத யாத்திரையாக ஸ்ரீ துக்காராம் மஹாராஜூடனேயே பாடிக்கொண்டு வருவதாக பாவித்து பாண்டுரங்கன் மேல் அபங்கம் என்ற  பாடல்களை பாடிக்கொண்டு அந்த பல்லக்கை தொடர்ந்து வருகிறார்கள் .


இதுபோலவே மராட்டிய மாநிலம் ஆலந்தி என்னும் இடத்திலிருந்து ஸ்ரீ ஞானேஸ்வரரின் பாதுகைகளை தாங்கிய பல்லக்கு பக்தர்களுடன் புறப்பட்டு ஏகாதசியன்று பண்டரிபுரம் சென்று சேரும்.


ஆங்காங்கே பல ஊர்களிலிருந்தும் மக்கள் வழியில் சேர்ந்துகொள்ள பக்தர் வெள்ளம் ஆஷாட ஏகாதசியன்று பாண்டுரங்கனைப் பாடிக் கொண்டு பண்டரிபுரம் வருகிறார்கள்.. 

ஸ்ரீ துக்காராம் மஹராஜ் கி ஜெய்🙏🏼

ஸ்ரீ ஞானேஸ்வர் மஹராஜ் கி ஜெய்🙏🏼

ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பாண்டுரங்க மஹராஜ் கி ஜெய்🙏🏼

ஜெய்ஜெய் விட்டல்🙏🏼

ஜெய் ஹரி விட்டல்🙏🏼


இன்றை நிவேதனம்..பாதாம்கீர்,

பயத்தம் பருப்பு பாயசம்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சார்தாம் யாத்ரா..14

சார்தாம் யாத்ரா..9

சார்தாம் யாத்ரா..13