அம்மாவுக்கு அர்ப்பணம்🙏🏻..8.3.'22
அம்மாவுக்கு அர்ப்பணம்🙏🏻
அன்னையர் தினத்தில் என் அம்மாவின் நினைவுகள் கடிதமாக...
அன்புள்ள அம்மா
அநேக நமஸ்காரம். நலம்.நலமறிய அவா. இங்கு நான் உன் மாப்பிள்ளை பேரன் பேத்திகள் கொள்ளு பேரன் பேத்திகள் எல்லாரும் நலம்.நீ எப்படி இருக்கிறாய்?
ஏன்மா..அப்பாவை விட்டு எந்த இடமும் போகாத நீ சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டாயே? பாவம்..அப்பா நீயில்லாமல் எட்டு வருடம் ரொம்பவே கஷ்டப்பட்டார். அப்பா வந்ததும் இப்போ சந்தோஷமாக இருப்பாயே!
நான் உன்னிடம் நேரில் பேச முடியாத விஷயங்களை இந்த கடிதத்தில் எழுதுகிறேன். நான் குழந்தையாய் இருந்தபோது சாப்பிட ரொம்ப படுத்துவேன் என்பாயே? உன் வேலை
யெல்லாம் விட்டு எனக்கு சாதம் ஊட்டுவதற்குள் எவ்வளவு கஷ்டப்பட்டாயோ?
இரவில் உன் புடவையைப் பிடித்துக் கொண்டு தூங்கும்போது தூக்கம் வராமல் அந்தப் புடவையை வாயில் கடித்து கிழித்து விடுவேன் என்று சொல்லியிருக்கிறாய். உனக்கு ரொம்பப் பிடித்து வாங்கிக் கொண்ட பட்டுப் புடவையை நான் கிழித்த போது ரொம்ப வருத்தப் பட்டாய் என்று சித்தி சொன்னார். நான் எவ்வளவு கஷ்டப் படுத்திருக்கேன் உன்னை.
நிற்க..எனக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்தையும் காரணத்தோடு சொல்லிக் கொடுத்த நீ இப்படி கடிதம் எழுதும்போது 'நிற்க' என்று போடுவது ஏன் என்று சொல்லவில்லையே! முன்பெல்லாம் இப்படி எழுதும்போது 'நிற்க என்றால் எழுந்து நின்று படிக்கணுமா'என்று நான் கேட்பேன்! அது கடிதம் எழுதும் முறை என்பாய்!
உன் ஒவ்வொரு கடிதமும் பல கதை சொல்லும்...
நீ கண்ணெதிரில் நின்று பேசுவது போலிருக்கும்...
மணி மணியான எழுத்துக்கள் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போன்றிருக்கும்...
சிலமுறை 4,5 பேப்பர்களில் எழுதி கவரில் வைத்து ஒட்டி அனுப்புவாய். அதிலுள்ள விஷயங்களைப் படிக்கும்போது நான் நம் வீட்டுக்கு வந்து விட்டாற் போல உயிரோட்டமாக இருக்கும்.
உன் மன வருத்தங்களைக் கோடிட்டுக் காட்டி எழுதும் நீ 'இதற்காக கவலைப் படாதே. புக்ககத்தில் நல்ல பெயர் வாங்கு. பொறுப்போடு இரு' என்று எத்தனை அறிவுரை சொல்லியிருக்கிறாய். இன்றுவரை அதையெல்லாம் நான் கடைப் பிடிக்கிறேன் அம்மா.
என் நான்கு குழந்தைகள் பிரசவத்திற்கு நம் வீட்டுக்கு வரும்போது எப்படி என்னைப் பார்த்துக் கொள்வாய்...
அப்பா தம்பிகளுக்கும் செய்து கொண்டு எனக்கு பத்தியம், கைக்குழந்தை வேலைகளை சற்றும் சலிக்காமல் முகம் சுளிக்காமல் செய்த நீ தெய்வம்மா. ஒவ்வொரு முறை நான் அங்கு வரும்போதும் நீ அடைந்த சந்தோஷம்..
நான் கிளம்பும்போது வெடித்து அழுகையாய் வெளிவரும்.. நான்தான் கல் நெஞ்சுக்காரி..
எனக்கு அழுகையே வந்ததில்லை. இப்போதோ உன்னை நினைக்கும்போதே கண்ணீர் பெருகுகிறது...
உன்னிடம் எவ்வளவோ பேச மனம் துடிக்கிறது..
நீ என்னருகில் இல்லையே.
உனக்கு இதயநோய் வந்து சென்னை ராமச்சந்திரா மருத்துவ மனையில் இருந்தபோது எனக்கு உன்னைப் பார்க்க வரக்கூட முடியாதபடி குடும்பப் பொறுப்புகள். நீ பழையபடி சரியாக வேண்டி அத்தனை தெய்வங்களிடமும் வேண்டிக் கொண்டேன். நல்லவேளை நீ உடம்பு நலமாகி வந்தவுடன் உன்னைப் பார்க்க வந்தேன். அப்பவும் நீ 'உன் குழந்தைகள், கணவர் கஷ்டப் படப் போகிறார்கள். சீக்கிரம் திரும்பப் போ' என்றாய்.
உன் பேத்தி கல்யாணத்திற்கு வருவதற்கு டாக்டர் எந்த அதிர்வும் இதயத்திற்கு தரக்கூடாது, எந்நேரமும் மாரடைப்பு வரலாம் என்று எச்சரித்தும் நீ அவள் திருமணத்திற்கு போயே தீருவேன் என்று தைரியமாகக் கிளம்பி வந்தாயே. நீ நல்லபடி இருக்கணுமே என்று எங்கள் இதயமெல்லாம் 'திக் திக்' என்று இருந்தது. எவ்வளவு சந்தோஷமாக ஒவ்வொன்றையும் அனுபவித்து மகிழ்ந்தாய்.
என் பிள்ளை உன் செல்லப் பேரனுக்கு நீதான் பெண் பார்த்து முடிவு செய்தாய். 'என் பேரன் ரொம்ப நல்ல பையன். ரொம்ப புத்திசாலி. உன்னை நன்றாக வைத்துக் கொள்வான்' என்று நீ சொன்னதை என் மாட்டுப்பெண் இன்னமும் சொல்வாள்.
அவன் திருமணத்தைப் பார்க்கா விட்டாலும் நிச்சயதார்த்தத்தில் அவர்களை மாலையும் கழுத்துமாகப் பார்த்து சந்தோஷப் பட்டாயே. அது முடிந்த ஒரே மாதத்தில் நீ மறைந்தது எங்களால் தாங்க முடியவில்லை.
கொள்ளுப் பேரன் பேத்திகள் பிறக்கப் போவதை அறிந்த நீ அவர்கள் பிறக்கும்போது இல்லை.நீ மறைந்த பதினைந்தாம் நாள் உன் முதல் பேரனுக்கு பெண் பிறந்தாள். நீதான் அவனுக்கு பெண்ணாக வந்து பிறந்தாயோ?
பாட்டு, கோலம், தையல், சமையல், ஓவியம், எழுத்து எல்லாவற்றிலும் உன்னைப் போலவே என்னையும் உருவாக்கினாய். சமைக்கும்போது கூட 'பளிச்'சென்று இருப்பாயே! நீ புடவை கட்டுவதும் தலைவாரி பொட்டு இட்டுக் கொள்வதும் கூட அழகுதான்! நான் உன் அளவு perfect இல்லை அம்மா!
என்னுடைய சின்ன துணுக்கு எந்த புத்தகத்தில் வந்தாலும் அதுபற்றி உடன் ஃபோன் செய்து பாராட்டுவாயே. இப்பொழுது ஃபேஸ் புக்கில் பல தளங்களில் நிறைய எழுதுகிறேன். படித்து பாராட்ட நீயில்லையே அம்மா😥
புட்டபர்த்தி சென்று மூன்று நாள் தங்க வேண்டும், சுவாமியை ஒவ்வொரு நேரமும் கண்குளிர தரிசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாய். அப்பா கவலையுடன் வேண்டாம் என்றபோதும் பிடிவாதமாக போக வேண்டும் என்றதால் நான் உங்களை அழைத்துச் சென்றேன்.
நீ ஆசைப் பட்டது போல் அற்புத தரிசனம். சுப்ரபாதம் நகர்பஜன் எல்லாவற்றுக்கும் நீயும் வந்தாயே. உன் ஆசையை நான் நிறைவேற்றினேன் என்று சந்தோஷப்பட்டாயே..அதுதான் உன் கடைசி பயணம் என்று தெரியாமல் போயிற்றே😢
2005 மே 8ம் தேதி உனக்கு ஃபோனில் Mother's dayக்கு wish பண்ணிய போது உன்னால் பேச முடியவில்லை. அப்படியும் என் பிள்ளை கல்யாணம் பற்றி பேசினாய். 'இன்னும் நாலு மாசம் இருக்கே கல்யாணத்திற்கு. நான் இருப்பேனோ மாட்டேனோ' என்றாய். அடுத்த ஒரே வாரத்தில் நீ எங்களை விட்டுப் போய்விடுவாய் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே அம்மா😒😓
நீ மறைந்ததற்கு முதல்நாள் நான் உன்னிடம் பேச ஃபோன் செய்தபோது நீ தூங்கிக் கொண்டிருப்பதாய் சொன்னார்கள்.
மறுநாள் ஆஸ்பத்திரிக்கு போய் அட்மிட் செய்ய வீல்சேரில் அழைத்துப் போகும்போதே உன் தலை சாய்ந்து விட்டது என்று கேட்டு கலங்கி விட்டேன். நான் வந்தபோது கண்ணாடிப் பெட்டிக்குள் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த உன்னைப் பார்த்துக் கதறி விட்டேன்.
இன்னொரு பிறவி இருந்தால் அதில் நான் உன் மகளாகவே பிறந்து உன்னை சிறப்பாகக் கவனித்துக் கொண்டு நீ எனக்கு செய்தவற்றைத் திருப்பிச் செய்ய வேண்டும் என்பதே இறைவனிடம் என் வேண்டுதல்.
எப்பொழுதும் உன் நினைவில் உன் அன்பு மகள்
ராதா
கருத்துகள்
கருத்துரையிடுக