மார்கழி மாதம் வந்தாச்சு...15.12.'21

 


மார்கழி  ஆரம்பிக்கப்  போவதை  நினைக்கும்போதே  உடலும், மனமும் சிலுசிலுக்கிறது. மார்கழி  மாதப்  பனியும்,  குளிரும்,  விடிகாலையில்  கண்  விழிக்கும்போதே  எல்.  ஆர்.. ஈஸ்வரியின்  குரலில்  ஒலிக்கும்  மாரியம்மா,  காளியம்மா  பாடல்களும், , திருப்பாவை,     திருவெம்பாவைப்  பாடல்கள் இன்னும் நினைவில்!


காலையில்  எழுந்து  பக்கத்து  வீட்டை  விடப்  பெரியதாகப்  போடும்  கோலமும் ,  அதை  அன்று  முழுதும்  நின்று  ரசிப்பதும்  இன்றைய   இளம்  பெண்களும்,  குழந்தைகளும்  அறியாத, அனுபவிக்காத    ஒன்று.  மார்கழி  பிறப்பதை  நினைக்கும்போதே  அந்த  நாட்களின்  ஞாபகம்  வந்து  நெஞ்சில்  நிற்கிறது.  இன்று  நாம்  வாழும்  ஃபிளாட்டுகளில் வாசலும்  இல்லை..கோலமும்  இல்லை..அதை    ரசிப்பவரும்  இல்லை.


என்   திருமணத்திற்கு முன்பு . நான்கு  மணிக்கெல்லாம்  என் அம்மா 'எழுந்திரு.  மார்கழி மாதம்   விடிகாலையில் எழ  வேண்டும்.  வாசல்  எல்லாம்  தெளித்தாச்சு.  கோலம்  போடு'  என்பார்.  கண்கள்  இன்னும்  தூங்க  விரும்பினாலும்  கோல  ஆசை  தூக்கத்தை  விரட்டி  விடும். கோலத்தை  போட்டு  முடித்து  குளித்து,  பக்கத்திலிருந்த  கோவிலுக்கு  சென்று  பஜனையில்  பாடிவிட்டு,  சுடசுடப் பொங்கலைப்  பெற்றுக்

கொண்டு  வந்து  வீட்டில்  அதை  ருசித்து  சாப்பிடும்  அனுபவம் ....இன்றும்  மனம்  அந்த  நாளுக்காக  ஏங்குகிறது!   

அறியாத  வயதில்  அன்று  செய்த  அந்தப்  புண்ணியம்தான்  இன்று  அன்பான  கணவரையும்,  அருமையான  குழந்தை

களையும்  கிடைக்கச்  செய்தது  போலும்! எட்டு  வயது முதல்  எந்தக்  கோலம்  பார்த்தாலும்  அதை  அப்படியே  மனதில்  வைத்து  மறுநாள்  வாசலில்  போடுவேன். விதவிதமாகக்  கோலம்  போடும்  என்  அம்மா  அச்சு  மாதிரி  சிறிதும்  வளையாமல்,  கோணல்  இல்லாமல்  புள்ளி  வைக்கும்  திறமையும்,  அளவெடுத்தாற்

போல்  கோலம்  போடும்  அழகும்  என்னிடம்  கொஞ்சம்  குறைவுதான்! 


ஆனாலும்  புள்ளிக்கோலம்,  வளைவுக்  கோலம்,  நேர்கோட்டுக்  கோலம்  என்று எனக்குத்  தெரிந்த  கோலங்களைப்   போட்ட நோட்டுகள்  ஏழெட்டு  இன்னமும்  என்னிடம்  உள்ளன. அதிர்ஷ்ட  வசமாக  நாங்கள்  குடியிருந்த  வீட்டு  வாசல்கள்  கோலம்  போட   ஏற்றதாக  இருந்ததால்,  நானும்,  என்  மகளும்  சேர்ந்து  அமர்க்களமாகக்  கோலம்  போடுவோம். 


என்  கணவருக்கு,  பிள்ளைகளுக்கு  ரொம்ப  பிடித்த  கோலங்கள்  கூட  உண்டு!  தினமும்  போட   வேண்டிய  கோலங்களை  என்  பிள்ளைகள்தான்  தேர்ந்தெடுத்துக்  கொடுப்பார்கள்!   தினமலர்  பத்திரிகையின்  பரிசைக்  கூட  பெற்றுள்ளோம். கோலப்  போட்டிகளிலும்  கலந்து  கொண்டு  பரிசுகளைப்  பெற்றதுண்டு.  

நாளை வரும்..


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சார்தாம் யாத்ரா..14

சார்தாம் யாத்ரா..9

சார்தாம் யாத்ரா..13